கேரளாவில் எலிக்காய்ச்சலால் கடந்த நான்கு நாட்களில் 35 பேர் பலியாகி உள்ளனர். எலிக்காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க, தேனி மாவட்ட திழக, கேரள எல்லைப்பகுதிகளில் அரசு சிறப்பு மருத்துவமுகாம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. வெள்ளம் மிரட்டிய கேரளாவை இப்போது எலிக்காய்ச்சல் மிரட்டி வருகிறது. எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) எலியின் சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. கேரளாவில் நேற்று மட்டும் எலிக்காய்ச்சலால் பத்தனம்திட்டா ரஞ்சு, கோழிக்கோடு அனில்குமார்(54), வடகரை நாராயணி(80), தொடுபுழா ஜோசப் மேத்யூ(58), ரவி(59) என ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இத்தோடு கடந்த 4 நாட்களில் எலிக்காய்ச்சலுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு தினக்கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். அதேபோல் கேரளாவின் பல பகுதியிலிருந்தும் அம்மாநில மக்கள் தமிழகத்திற்கு வருகின்றனர். கேரளாவில் மிக வேகமாக பரவிவரும் இந்த எலிக்காய்ச்சல் தமிழக பகுதிக்குள் பரவாமல் தடுக்கும் விதமாக தேனி மாவட்ட தமிழக-கேரள எல்லை பகுதிகளான போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து, சோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கேரளாவில் வெகு வேகமாக பரவிவரும் எலிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க கேரள சுகாதாரத்துறை முழுவீச்சில் ஈடுபட்டாலும், எலிக்காய்ச்சல் தமிழக பகுதிக்குள் பரவாமல் தடுக்க தேனி மாவட்ட தமிழக கேரள எல்லை பகுதிகளில், டாக்டர் தலைமையில் சுகாதார ஆய்வாளர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கொண்ட குழு கொண்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க மாவட்ட சுகாதாரத்துறை முன்வர வேண்டும்’’ என்றனர்.