கேரளாவிற்கு இறைச்சிக்காக, லாரியில் கொண்டு சென்ற 32 மாடுகள் மீட்பு

0
99

விருதுநகர் மாவட்டம் குமாரபுரத்தை சேர்ந்தவர் சுனிதா. இவர் மேனகா காந்தி நடத்தி வரும் பீப்பிள் பார் அனிமல் என்ற தனியார் விலங்குகள் நல அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று மாலை கோவையை அடுத்த பாலக்காடு பைபாஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருடைய காருக்கு முன்பாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

முழுவதும் மூடப்பட்ட அந்த லாரியில் ஒரு சிறு ஓட்டை வழியாக விலங்குகளின் கால்கள் வெளியே தெரிந்தன. இதனால் சந்தேகமடைந்த சுனிதா, கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் விரைந்து சென்று அந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அந்த லாரியை சோதனையிட்ட போது அதற்குள் மாடுகள் இருந்தன. இது பற்றி லாரி டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு 32 காளை மாடுகளை இறைச்சிக்காக லாரியில் அடைத்து கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும் கேரளாவுக்கு செல்லும் வழியில் மாடுகள் தூங்கி ஒன்றின்மேல் ஒன்று சாயாமல் இருக்க அதன் கண்களில் தேய்ப்பதற்காக பச்சைமிளகாயை ஒரு பாலித்தீன் கவரில் வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மாடுகள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து சூலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் சுனிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவிற்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.