கூரியர் அலுவலகம் உட்பட 5 இடங்களில் திருட்டு

0
4

கோவை, பிப்.1: கோவை சுந்தராபுரத்தில் ஒரே நாளில் கூரியர் அலுவலம் உட்பட 5 இடங்களில் திருட்டு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை போத்தனூர் வெள்ளலூர் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த்குமார் (33). இவர், சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியில் கூரியர் அலுவலகம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு ஆனந்த்குமார் வழக்கம் போல வேலையை முடித்து கொரியர் அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

மறுநாள் காலை அவரது கூரியர் அலுவலகத்திற்கு அருகில் டூல்ஸ் கடை நடத்தி வரும் முகுந்தன் என்பவர் அழைத்து அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அலுவலகத்திற்கு வந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கு கல்லா பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிந்தது.

அதேபோல், முகுந்தனின் டூல்ஸ் கடையில் ரூ.1000, அவரது கடைக்கு அருகில் உள்ள நாகராஜ் என்பவரது கடையில் ரூ.24 ஆயிரம், செல்போன் கடையில் ரூ.2 ஆயிரம், கம்ப்யூட்டர் கடையில் ரூ.1000 என அடுத்தடுத்து 5 கடைகளில் ரூ.31 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஆனந்த்குமார் சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.