குழாய் உடைந்து ரோட்டில் வீணாக ஓடிய குடிநீர்

0
76

பொள்ளாச்சி அருகே குழாய் உடைந்து ரோட்டில் குடிநீர் ஆறாக ஓடியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குழாய் உடைப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள மாமரத்துபட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு ஆழியாறில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. ஆழியாறில் இருந்து குழாய் மூலம் ஆவல்சின்னாம்பாளையத்தில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து மாமரத்துபட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஆவல்சின்னாம்பாளையத்தில் ரோட்டோரத்தில் இருந்த குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாகி ரோட்டில் ஆறாக ஓடியது. மேலும் ரோட்டில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆழியாறு அணை மூலம் பல்வேறு கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்கிடையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லேசான கசிவு இருக்கும் போது அதிகாரிகள் அதை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை. உடைப்பு பெரிதாகி அதிகளவு குடிநீர் வீணாகிய பிறகு தான் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் குடிநீர் வீணாகி ரோட்டில் ஓடும் நிலை ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

ஆவல்சின்னாம்பாளையம் நீரேற்று நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் தான் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. லேசான கசிவு இருக்கும் போது அதிகாரிகள் சீரமைத்து இருந்தால் குடிநீர் வீணாகி இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கசிவு உள்ள இடங்களை கண்டறிந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாமரத்துபட்டிக்கு செல்லும் குழாய் உடைப்பு சரிசெய்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.