குழந்தைகளுக்கு பாதவளைவு குறைபாடு அரசு மருத்துவமனையில் நிரந்தர தீர்வு

0
7

கோவை : இந்தியாவில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளில், பாத வளைவு அதிகம். இதற்கு, 100 சதவீதம் தீர்வை ஏற்படுத்த முடியும் என்பதால், இப்பாதிப்பு உள்ள குழந்தைகளின் பெற்றோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

கோவை அரசு மருத்துவனையில், எலும்பு முறிவு மற்றும் சிகிச்சை பிரிவில், ஒவ்வொரு வியாழனும், இலவசமாக பாதவளைவு குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 500 குழந்தைகளை, சகஜமாக நடமாட வைத்துள்ளனர்.

இதுகுறித்து, அரசு மருத்துவமனை எலும்பு முறிவு மற்றும் சிகிச்சை பிரிவு இயக்குனர் வெற்றிவேல் செழியன் மற்றும் டீன் நிர்மலா கூறியதாவது:

பிறக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகளில், பாதவளைவு என்பது அதிகம் காணப்படுகிறது. இக்குறைபாட்டை சரிசெய்வது எளிது என்பதை, பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும்.

அரசு மருத்துவமனையில், இக்குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த முதல் மாதம், அவர்களின் தோல் மிருதுவாக இருக்கும் என்பதால், மாவுகட்டு போடுவதை தவிர்த்து விடுவோம். முதல் மாதம், கால் நேராக திருப்புவதற்கு செய்முறை பயிற்சி அளிக்கின்றோம். தோல் சற்று வந்தபின், மாவுகட்டு போடுகின்றோம்.

தொடர்ந்து, 15 நாள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை வர வைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு மாவுக்கட்டு போடப்படுகிறது. மூன்று அல்லது ஆறு மாதங்களில் சரிசெய்து விடலாம்.

குழந்தை நடக்கும் வரை, பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சிகிச்சைக்குப் பின் இலவசமாக சிறப்பு காலணி வழங்கப்படுகிறது.

இதுபோன்ற பாதவளைவு சிக்கல்களுக்கு, நாட்டு மருத்துவம் ஏதும் செய்யாமல், அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் வந்தால், முழுமையாக சரிசெய்து விடலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

பாதவளைவு சிக்கல்களுக்கு, நாட்டு மருத்துவம் ஏதும் செய்யாமல், அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் வந்தால், முழுமையாக சரிசெய்து விடலாம்.