சூலுார்; நடமாடும் ரேஷன் கடையாவது வந்ததே என,குளத்துப்பாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சூலுார் ஒன்றியம், கிட்டாம் பாளையத்துக்கு உட்பட்டது குளத்துப்பாளையம் கிராமம். 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராம மக்கள், ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால், 2 கி.மீ., தூரத்தில் உள்ள கிட்டாம்பாளையத்துக்கு வரவேண்டிய நிலை உள்ளது. பஸ் வசதி இல்லாததால், நடந்து சென்றுதான் பொருட்கள் வாங்கி வந்தனர். தங்கள் கிராமத்துக்கு தனியாக ரேஷன் கடை வேண்டும், என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்கள் முயற்சியில் அரசின் அனுமதியுடன் கடை கட்டப்பட்டது. ஆனால், பகுதி நேர கடை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஊராட்சி தலைவர் மற்றும் மக்களின் தொடர் முயற்சி காரணமாக, நடமாடும் ரேஷன் கடைக்கு அனுமதி கிடைத்தது.
இதையடுத்து, ஊராட்சி தலைவர் சந்திரசேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
நடமாடும் ரேஷன் கடை மூலம் வந்த பொருட்களை கார்டு தாரர்களுக்கு வழங்கினார்.
ஓரிரு மாதங்களில் பகுதி நேர ரேஷன்கடைக்கு உரிய அனுமதி கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறினர். நடமாடும் ரேஷன் கடையாவது வந்ததே என, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.