குறைந்த விலையில் உயர்ரக காய்கறி நாற்றுகள் விற்பனை

0
13

கோவை : கோவை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், அரசு தோட்டக்கலை பண்ணைகள் ஆனைகட்டி மற்றும் கண்ணம்பாளையத்தில், குறைந்த விலையில் உயர் ரக காய்கறி நாற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:

அனைத்து விதமான பழநாற்றுகள், தென்னை, பாக்கு, குறுமிளகு நாற்றுகள், மூலிகை நாற்றுகள், மரச்செடிகள், அலங்காரச் செடிகள், உயிர் உரங்களை அரசு மானியத்திட்டங்கள் வாயிலாகவும் நேரடியாகவும், தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன.

குறைந்த விலையில் நாற்று பெற்றிட, நேரடி விற்பனை நடைபெறுகிறது. குறைந்த பட்சம் 15 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை தோட்டக்கலை செடிகள், தோட்டத்து நாற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

விவசாயிகளுக்கு தேவையான காய்கறி நாற்றுகளை, தேவைப்படும் ரகங்களின், விதையினை கொள்முதல் செய்து, பண்ணையில் வழங்கும்பட்சத்தில், நாற்றுகளும் பண்ணை விலையில் உற்பத்தி செய்தும் தரப்படும்.

ஆனைமலை வட்டம், ஆழியார் நகரில் உள்ள மாநில தென்னை நாற்றுப் பண்ணையின் மூலம் தென்னை நாற்றுகள் நெட்டை ரகம் – 65 ரூபாய்க்கு எனவும், நெட்டை குட்டை ரகம் – 125 ரூபாய்க்கு எனவும் உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அனைத்தும் விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.