குறைதீர் கூட்டத்தில் பங்கேற்பதை விட என்ன வேலை? ‘மாயமாகும் ‘ அதிகாரிகளுக்கு ‘மெமோ’

0
6

கோவை; கோவை தெற்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த, விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்காத, அரசுத்துறை அதிகாரிகளுக்கு, ‘மெமோ’ வழங்கப்பட்டது.

கோவையில் திங்கள்தோறும் கலெக்டர் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டமும், மாதத்தின் கடைசி வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர் கூட்டமும் நடைபெறுவது வழக்கம். அதற்கு முன் வடக்கு மற்றும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இது போன்ற கூட்டங்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும்பாலும் பங்கேற்பதில்லை என்ற குற்றச்சாட்டு நெடுநாட்களாகவே உள்ளது. சில கூட்டங்களில், அதிகாரிகளின் சார்பில் ஊழியர்கள் பங்கேற்பர்.

அவர்களால் அதிகாரபூர்வமாக பதிலளிக்க முடியாது என்பதால், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது.

இந்நிலையில், நேற்று கோவை தெற்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திலும் வழக்கம் போல் அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இந்த முறை விவசாயிகள் இந்த விஷயத்தை லேசில் விட வில்லை.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

தடாகம், வரப்பாளையம், பெ.நா.பாளையம் பகுதிகளில் காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. மயில், விளைபயிர்களை கொத்தி நாசப்படுத்துகிறது. மதுக்கரை குமுட்டிபதி பகுதிகளில், கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

விவசாயிகளின் தோட்டத்து சாலைகளில் புகுந்து ஆடுகளையும், வளர்ப்பு நாய்களையும் கவ்வி செல்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, 30 கிலோ எடை கொண்ட ஆட்டை கவ்வி சென்றது.

நாய், காட்டுப்பன்றிகளின் தலைகளை கடித்து துண்டாக்கி விட்டு, உடலை மட்டும் எடுத்து செல்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

நிலைமை மோசமாகி விட்டது. சிறுத்தைகள், தோட்டத்து சாளைகளை தாண்டி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் மதுக்கரையை ஒட்டிய கிராமங்களில் முகாமிட்டு, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் புலம்பித்தீர்த்தனர்.

இதைக்கேட்ட தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார், ”வனத்துறையிலிருந்து அதிகாரிகள் யாரேனும் வந்திருக்கிறீர்களா,” என்று உரக்க கேட்டார். பதிலே இல்லை.

அதன் பிறகுதான் தெரிந்தது, வனத்துறையில் இருந்து மட்டுமல்ல, மின்வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அரசு போக்குவரத்துக்கழகம், குடிநீர்வடிகால் வாரியம் போன்ற அரசின் பல்வேறு துறையிலிருந்தும் யாரும் வரவில்லை என்பது.

புகார் கொடுங்க

உடனே கோட்டாட்சியர், ”துறைசார்ந்த அதிகாரிகள் வராததால், என்னால் பதிலளிக்க முடியவில்லை, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை. அதனால் கலெக்டர் தலைமையில் நடக்கும் குறைதீர்ப்பு கூட்டத்தில், இங்கு நடந்ததை புகாராக கூறுங்கள்,” என்றார்.

அதற்கு விவசாயிகள், ‘வராத அதிகாரிகளுக்கு ‘மெமோ ‘ கொடுப்பது உங்கள் வேலை. அதை விட்டு எங்களை புகார் சொல்ல சொல்கிறீர்களே. இதை செய்யாவிட்டால், உங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம்’ என்றனர்.

இதை சற்றும் எதிர்பாராத கோட்டாட்சியர், ”நீங்கள் சொல்வது சரிதான். வராத அதிகாரிகளுக்கு ‘மெமோ’ கொடுக்கிறேன், கலெக்டருக்கும் பரிந்துரை செய்கிறேன்.

”சிறுத்தை விவகாரம் தொடர்பாக, உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன்,” என்றார்.

இதையடுத்து விவசாயிகள் அமைதியாயினர்.

இக்கூட்டத்தில், தெற்கு வருவாய் கோட்டத்துக்குட்பட்ட தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இனி வரும் கூட்டங்களிலாவது, துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்கிறார்களா என பார்ப்போம்!

கலெக்டர் தலையிட வேண்டும்

விவசாயிகள் கூறியதாவது:முன்பு மதுக்கரை பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை, தற்போது கோவை புறநகர் பகுதி முழுக்க சுற்றுகிறது. சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அதிகாலையில் பால்காரர்கள் கூட பாலுக்கு செல்வதில்லை. மக்களிடம் உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. புகார் செய்தால், வனத்துறை செவிமடுப்பதில்லை, அதிகாரிகள் அழைக்கும் கூட்டத்திலும் பங்கேற்பதில்லை. இவ்விவகாரத்தில் கலெக்டர் தலையிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.