குறும்பு செய்த தம்பியை அடிக்க அக்காவிடம் பிரம்பு; த லைமை ஆசிரியர் மீது புகார்

0
4

பொள்ளாச்சி : ‘பொள்ளாச்சி அருகே, அரசுப்பள்ளியில் குறும்பு செய்த தம்பியைஅடிக்க, அக்காவிடம் பிரம்பு கொடுத்த பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என, பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள, ஜமீன்முத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர், சக மாணவர்களுடன் விளையாடும் போது, சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி, அந்த வகுப்பு ஆசிரியர், பள்ளி தலைமையாசிரியர் திலகவதியிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

தலைமையாசிரியர், மாணவரை முட்டி போட வைத்ததாகவும், அதே பள்ளியில் படிக்கும் அக்காவை அழைத்து, பிரம்பை கொடுத்து மாணவனை அடிக்க கூறியதாகவும் தெரிகிறது.

அதில், மாணவனுக்கு, கை, உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து பெற்றோர், இருவரிடம் விசாரித்த போது, பள்ளியில் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.

தம்பியை அடிக்க அக்காவிடம் பிரம்பை கொடுத்த தலைமையாசிரியரை கண்டித்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் அடிக்காமல், அக்காவிடம் பிரம்பை கொடுத்து அடிக்க கூறியது தவறு எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற தாலுகா போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.