தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு ஜூலை 24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை(நாளை) தேர்வு நடைபெறுகிறது. இதற்காக டி.என்.பி.எஸ்.சி. விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் ஆண்கள் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர், பெண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.
காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7 ஆயிரத்து 689 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. சென்னையில் 503 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். இந்த தேர்வில் மொத்தம் 534 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணிகள் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வில், தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
* தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும்.
* 9 மணிக்கு OMR தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும்.
* 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும், 12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது
* தேர்வர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், செல்போன்கள் மற்றும் இதர பொருட்களைத் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை .
* தேர்வர்கள் தங்களுடைய கையெழுத்தை OMR தாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும், இடதுகை பெருவிரல் ரேகையை OMR தாளில் தேர்வு முடிந்த பின் பதிவிட வேண்டும், கருப்பு பால் பாய்ண்ட் பேனாவைத் தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில் எழுதக் கூடாது, தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும்.
* ஒரு கட்டத்தைத் தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களைத் விடைகளாகக் குறிக்கக்கூடாது .
* விடை தெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் Shade செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.