கோவை, டிச. 10: தமிழகம் முழுவதும் குரூப்-1 முதன்மை தேர்வு இன்று முதல் வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட 90 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி பணியிடங்களுக்கான உத்தரவு வழங்கப்படும். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள அக்ஷ்யா இன்ஸ்டிடியூடில் இன்று, நாளை என இரண்டு நாட்கள் முதன்மை தேர்வு நடக்கிறது. இதனை மொத்தம் 836 பேர் எழுதவுள்ளனர். இந்த தேர்வு அறைகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
தேர்வு கூடம், தேர்வு மைய வளாகம் மற்றும் தேர்வு கண்காணிப்பாளிடம் அத்துமீறும் செயல்களில் தேர்வர்கள் ஈடுபட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன், புளுடூத் உள்ளிட்ட அனைத்து நவீன தொலைத்தொடர்பு கருவிகளும் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் தேர்வர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விடைத்தாள்கள் செல்லாததாக ஆக்கப்படும் எனவும், தேர்வு எழுத தடை விதிக்கப்படும் எனவும் அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.