குருபெயர்ச்சி பலன்கள்

0
296

மேஷம்

வார்த்தை ஜாலங்களால் பல அதிசயங்களை நிகழ்த்தும் மேஷ ராசியினரே, நீங்கள் உண்மையையே பேச நினைப்பீர்கள். உங்கள் கருத்தில் தெளிவாக இருப்பீர்கள். யாருக்காகவும் உங்கள் நடுநிலையிலிருந்து மாறமாட்டீர்கள். இதுவரை உங்களது சப்தம ஸ்தானத்தில் இருந்த குருபகவான், அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். அஷ்டம ஸ்தானத்திலிருந்து உங்களது தனவாக்கு குடும்ப ஸ்தானம் சுக ஸ்தானம் விரய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.  ராகு உங்களது ராசிக்கு சுகஸ்தானத்திலும், சனி பாக்கிய ஸ்தானத்திலும், கேது தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குரு பெயர்ச்சியை புத்துணர்ச்சியுடன் சந்திக்கிறீர்கள். முயற்சிகள் பலசெய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும்.

வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். மற்றபடி மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுவீர்கள். கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் பாகப் பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும். செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். மற்றபடி அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும். உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் பண வரவு உண்டாகும். அதேநேரம் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.

சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது அதீத கவனத்துடன் செயல்பட்டு காரியமாற்றவும். கூட்டுத்தொழில் புரிவோர் சற்று உஷாராக இருப்பது நல்லது. சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நல்ல வருமானத்தைப் பெற முடியும். அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பார்கள். கலைத்துறையினரைத் தேடிப் புதிய  ஒப்பந்தங்கள் வரும்.

ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். எனவே ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை. பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதேசமயம் கணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: 

செவ்வாய்கிழமைதோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்:

1, 3, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி;

+  தன்னம்பிக்கை உயரும்.

– காரியங்களில் தடை.

 

 

ரிஷபம்

பார்த்தவுடன் பழகும் எண்ணத்தை மற்றவர்களுக்கு உருவாக்கும் ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களைக் கவருவதில் சிறந்து விளங்குவீர்கள். தோற்றத்திலும், பழக்கத்திலும், உங்கள் வார்த்தைகளிலும் மற்றவர்கள் எளிதில் உங்கள் வசம் வந்துவிடுவார்கள். இதுவரை உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். சப்தம ஸ்தானத்தில் இருந்து உங்களது ராசி தைரிய ஸ்தானம்  லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு தைரிய வீர்ய ஸ்தானத்திலும்  சனி அஷ்டம ஸ்தானத்திலும் கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப்பெயர்ச்சியில் உங்களின் வாக்குவன்மை உயரும். மற்றபடி உங்களின் ஆன்மிக சிந்தனைகள் மெருகேறும். புதிய ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபடுவீர்கள்.

குடும்பத்தின் வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பு பெருகும். உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். அதேநேரம் எவரிடமும் அனாவசிய பேச்சு வேண்டாம். மற்றவர்களின் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப உங்களின் செயல்பாடுகளை வகுத்துக்கொள்ளவும். புதுப்புது ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். திடீரென்று தொலை தூரப் பயணம் மேற்கொள்ளும் நிலைமை உருவாகும். உடல் ஆரோக்யத்தில் எந்தக் குறைபாடும் ஏற்படாது. யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலத்தையும், மன வளத்தையும் பெருக்கிக் கொள்வீர்கள். செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். போட்டியாளர்கள் பின் வாங்குவார்கள். அரசு வகையில் சில சலுகைகள் தேடி வரும். மனதில் ஏற்பட்ட இனம் புரியாத வேதனைகளும், பயங்களும் முற்றிலும் நீங்கிவிடும்.

உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் குறைகளைக் கண்டறிந்து தயவு தாட்சண்யமின்றி திருத்துவீர்கள். உங்களின் செயல்களுக்கு நண்பர்கள், கூட்டாளிகளிடம் வரவேற்பு கிடைக்கும். பெரியோரைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். நேர் வழியில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். உங்களின் முடிவுகளை பயமின்றி செயல்படுத்துவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். போட்டியாளர்கள் உங்களை ஏமாற்ற முடியாது. உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று பூர்த்தியாகும். உங்களின் தெளிந்த சிந்தனைகளால் பிறருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்குவீர்கள். உங்களைச் சார்ந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பீர்கள்.

வெளிநாடு விசா குறித்த சந்தேகத்தில் இருந்தவர்களுக்கு ஆச்சரியப்படும் வகையில் விசா கிடைத்துவிடும். காணாமல் போயிருந்த பொருட்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் புத்திர பாக்கியம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் ஓரளவுக்கு முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். அதேநேரம் வேலைப் பளு அதிகரிக்கும். எனவே பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ளுங்கள். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்ய நேரிடும். வியாபாரிகளுக்கு தொடர்ச்சியான லாபம் கிடைக்கும். அதிக முதலீடு செய்யாமல் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உபரி வருமானத்தை எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பீர்கள். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கட்சித் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் உங்கள் செயல்களைச் செய்து நற்பெயர் வாங்குவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கும். எனவே வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டிவரும். சக கலைஞர்களின் உதவிகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்மணிகளின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் திருமணம் நடக்கும். உத்யோகமும் கிடைக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியப் பிரச்னைகளில் மௌனம் சாதித்து பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவ மணிகள் படிப்பில் அலட்சியம் காட்டாமல், திட்டமிட்டபடி படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். மற்றபடி உங்கள் படிப்புக்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த மானியங்கள் கிடைக்கும்.

பரிகாரம்: 

வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்சனை நீங்கும். உறவினர் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

2, 6, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி

+  முதலீடு அதிகரிக்கும்.

– உடல்நலம் பாதிக்கும்.

 

மிதுனம்

அமைதியாக இருந்தாலும் உங்கள் காரியத்தில் கண்ணாக இருக்கும் மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் தேவையில்லாதவற்றைப் பற்றி யோசிக்க கூட மாட்டீர்கள். எது தேவையோ அதை மட்டும் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருப்பீர்கள். இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து உங்களது தனவாக்கு குடும்ப ஸ்தானம்   தொழில் ஸ்தானம்  விரய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும்  சனி சப்தம ஸ்தானத்திலும்  கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குரு பெயர்ச்சியில் சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்த நண்பர்கள் மனம் மாறி மீண்டும் நட்புடன் பழகத் தொடங்குவார்கள்.

கடினமான காரியங்களையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவார்கள். வசதி படைத்தவர்கள் உங்களின் நண்பர்கள் ஆவார்கள். உங்களின் எளிமையான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் படிப்படியாக உயரும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று வசிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய சூழ்நிலைகளில் வாழ உங்களைத் தயார்படுத்திக் கொள்வீர்கள். தொழிலாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வருமானம் உயரும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வார்கள். ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் உபரி வருமானம் உண்டாகும். இதனால் சேமிப்புகள் உயரும்.

வேலைகளில் சிறு தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதனால் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ளவும். பெற்றோர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். உங்களின் முக்கியமான வேலைகளை ரகசியமாக வைத்துக்கொள்வீர்கள். ஆனாலும் நண்பர்கள் உங்கள் மீதுள்ள பொறாமையினால் பகைமை பாராட்டுவார்கள். அதைப் பெரிது படுத்த வேண்டாம். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பிக்கொள்வீர்கள். பழைய வழக்குகள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். மற்றபடி உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். உங்களின் செயல்களைத் திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். தற்போது வசிக்கும் வீட்டை புதுப்பிப்பீர்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். புதிய இடங்களில் உங்களுக்கு சிறப்பான வரவேற்புகள் கிடைக்கும்.

ஆடம்பர கேளிக்கைகளில் குடும்பத்தாருடன் பங்கேற்று மகிழ்வீர்கள். உங்களை நம்பி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். அனைத்துப் பிரச்னைகளையும் நுட்பமாக ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கும் காலகட்டம் இது. உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் உங்களின் வேலைகளை தாமாகவே முன் வந்து பகிர்ந்து கொள்வார்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பார்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும்.

தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பாராட்டும், பணமும் ஒருங்கே கிடைக்கும். சக கலைஞர்களின் மூலம் உங்களைப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ரசிகர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மற்றபடி பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் குடும்பம் நல்ல நிலையை அடையும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி விளையாட்டுகளில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு முன்னேறவும். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: 

புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசியை அர்ப்பணித்து 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

2, 5, 6.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி.

+ குடும்பத்தில் சந்தோஷம்.

– தொழிலில் சுணக்கம்.

 

கடகம்

மனதில் எப்போதும் எதைப்பற்றியாவது கணக்கு போட்டுக் கொண்டே இருக்கும் கடக ராசி அன்பர்களே, நீங்கள் எதிர்காலத்தைப் பற்றியும், உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை எப்படி முடிப்பது என்பது பற்றியும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் இருந்து உங்களது ராசி பாக்கிய ஸ்தானம் லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசியில்  சனி ரண ருண ரோக ஸ்தானத்திலும்  கேது சப்தம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் தெய்வ அனுகூலத்துடன் உங்கள் வேலைகளை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் நிலையை உயர்த்திக் கொள்வதற்கு ஏதுவான நல்ல காரியங்களைச் செய்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். வருமானம் சீராக இருக்கும்.

வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளை முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்ப செயல் முறைகளை மாற்றிக் கொள்வீர்கள். இல்லத்தில் தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். அதேநேரம் சகோதர,சகோதரி வழியில் சிறிது மனத்தாங்கல் ஏற்படலாம். எனவே விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். அதோடு அனாவசிய வம்பு, வழக்குகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். மற்றபடி உங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் தாமாகவே தேடி வந்து நட்புகொள்வார்கள். உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டவர்கள்கூட உங்களுக்கு உதவி செய்யும் காலகட்டமாக இது அமைகிறது. புத்துணர்ச்சியுடன் செயல்பவீர்கள். கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலைமை சீரடையும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருப்பீர்கள்.

புதிய சொத்துக்களை வாங்கும்போது வில்லங்கம் ஏற்படாத வகையில் கவனமாக வாங்கவும். தொழில் ரீதியாக தேவையான பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். சிலருக்கு அரசு விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். சிலருக்கு புதிய வீட்டுக்கு பெயர்ச்சியாகும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்கள் வகையில் இருந்த வில்லங்கம் விலகி, சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பழைய சொத்துக்களும் விற்பனையாகும். இதனால் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குடும்பத்தார் உங்களுடன் விட்டுக் கொடுத்துப் பழகுவார்கள். உங்கள் தோற்றத்தில் வசீகரம் உண்டாகும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உங்கள் செயல்களை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களின் மூலம் ஓரளவுக்குத் தான் நன்மைகள் கிடைக்கும். மற்றபடி உங்கள் கௌரவத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படாது. சிலருக்கு விரும்பிய ஊர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிக்கல்களை சந்திப்பீர்கள். அதனால் சிலருக்கு நஷ்டங்கள் உண்டாகலாம். அதேநேரம் கூட்டாளிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நடந்துகொள்வார்கள். இதனால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். மற்றபடி புதிய முதலீடுகளை நன்கு யோசித்த பிறகே செய்யவும். அரசியல்வாதிகளுக்கு தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள்.

பல வழிகளிலும் வருமானம் பெருகும். தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம். ரசிகர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக கலைஞர்கள் நட்பு பாராட்டுவார்கள். பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த பெயர்ச்சி. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களை மதித்து நடப்பார். அவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சரளமாகவே இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவ-மணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். சீரிய முயற்சி செய்தால் மேலும் மதிப்பெண்களை அள்ளலாம். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்: 

துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஸ்ரீகர்ப்பாயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

2, 3, 7.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்.

+  சுப நிகழ்ச்சிகள்.

– கொடுத்த வாக்கில் சுணக்கம்.

 

சிம்மம்

னைவரின் கவனத்தையும் எளிதில் ஈர்க்கும் வல்லமை படைத்த சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். முதன்மையாக இருப்பதற்கான தகுதியையும் வளர்த்துக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்கள் நலனில் அதீத அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இதுவரை உங்களது தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். சுக ஸ்தானத்தில் இருந்து உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானம்  தொழில் ஸ்தானம்  விரய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். சனி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் கேது ரண ருண ரோக ஸ்தானத்திலும்  ராகு உங்களது விரய ஸ்தானத்திரும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குரு பெயர்ச்சியில் குடும்பத்தில் சூழ்ந்திருந்த பிரச்னைகள் விலகி தெளிவு பிறக்கும். குறிக்கோளை சுலபமாக அடைவீர்கள். பணக் கஷ்டம் நீங்கும். பொதுக்காரியங்களில் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்.

தாய் வழி உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேர்ந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டாகும். போட்டியாளர்களின் சதிகளை தவிடுபொடியாக்கி விடுவீர்கள். அதேநேரம் அவ்வப்போது உடல் உபாதைகள் தோன்றி மறையும். குறிப்பாக வயிறு, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். அதனால் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். மற்றபடி உங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். சட்டப் பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்வீர்கள். வம்பு, வழக்குகளை விட்டுக்கொடுத்து முடித்துக்கொள்வீர்கள். உங்களைப் பற்றி வீண் புரளி சொல்பவர்களிடமிருந்து விலகி இருப்பீர்கள். உங்களின் நுண்ணிய அறிவால் புதிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். தனிப்பட்ட முறையிலும், கூட்டுத் தொழிலிலும் நல்ல நிலை ஏற்படும். உங்களின் தெய்வ நம்பிக்கை பலப்படும். பிறரைச் சார்ந்து செய்து வந்த காரியங்களை தனித்துச் செய்து பெருமையடைவீர்கள். போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உற்றார், உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். வீட்டைப் பழுது பார்ப்பது போன்ற காரியங்களை பார்த்து செய்யவும். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன் துறைகளில் அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. அவசியமில்லாத பயணங்களைத் தவிர்க்கவும். அதோடு முக்கிய முடிவுகளை உயர்ந்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும்.

உடல் ஆரோக்யம், மன நலம் சீராக யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். ஆனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பினால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகலாம். மற்றபடி முயற்சி மேற்கொண்டால்தான் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலன் அடைவீர்கள். அதேநேரம் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். புதிய திட்டங்களை செயல்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவர்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உங்களின் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதேநேரம் தொண்டர்கள் உங்களை சிறிது அலட்சியப்படுத்துவார்கள். எனவே அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் பாராமுகத்தால் வேதனை அடைவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே அவர்களிடம் எந்தக் கோரிக்கையையும் எடுத்துச் செல்ல வேண்டாம். மற்றபடி பொறுப்புடனும், பொறுமையாகவும் நடந்துகொண்டு செயல்படவும். பெண்மணிகள் கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவரின்அன்பைப் பெறவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்த வாய்ப்பு உண்டாகும். மாணவ-மணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனவே படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.

பரிகாரம்: 

ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

1, 3, 5, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்.

+ பணவரவு.

– சொத்துகளில் பிரச்சனை.

 

கன்னி

மற்றவர்கள் கேட்டதை நிராகரிக்காமல் செய்து கொடுக்கும் மனமுடைய கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களின் தேவையை புரிந்து கொண்டு செயலாற்றுவதில் வல்லவர். இன்முகத்தோடு பிறரிடம் பழகும் குணம் கொண்டவர். இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருந்து உங்களது சப்தம களத்திர ஸ்தானம் பாக்கிய ஸ்தானம் லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். சனி சுக ஸ்தானத்திலும்  கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும்  ராகு உங்களது லாப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். தெளிவாக திட்டமிட்டு உடனுக்குடன் செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்களுக்கு மன உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுப்பீர்கள். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும்.

வசீகரமான பேச்சும் மிடுக்கான நடையும் உங்களின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றும். கிடைக்க வேண்டியவை தானாகவே கிடைத்துவிடும். வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகள் பிறந்து வம்சம் விருத்தியாகும். குடும்பத்தில் உற்றார், உறவினர்கள் முழுமையான ஆதரவைத் தந்து உங்களின் கைகளை பலப்படுத்துவார்கள். அதேநேரம் எதிலும் அவசரமும் பரபரப்பும் வேண்டாம். தவறு செய்பவர்களிடம் கூட்டு சேர வேண்டாம். அவர்களிடமிருந்து சுமுகமாக விலகிவிடவும். கடினமான உழைப்புக்கு நடுவே சற்று ஓய்வெடுத்துக்கொள்ளவும். மற்றபடி முன் அறிமுகம் இல்லாதவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். பண வசதிக்கு எந்தக் குறைவும்  ஏற்படாது. என்றாலும் கடினமாக உழைக்க வேண்டி வரும். சிலருக்கு அனாவசியச் செலவுகள் செய்ய நேரிடலாம்.

அதனால் மனச் சோர்வுக்கு ஆளாகாமல் உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. உற்றார், உறவினர்கள் ஒன்றுமில்லாத விஷயத்தைக் கூடப் பெரிதுபடுத்தி விடுவார்கள். எனவே அவர்களிடம்  எச்சரிக்கை தேவை. பிள்ளைகளுக்கு சிறிது பின்னடைவு ஏற்படும். செய்தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். மற்றபடி கோயில்களில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட பிணக்குகளைப் பேசித் தீர்த்துக் கொண்டு உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வீர்கள். உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று காலதாமதத்துடனே பரிசீலிப்பார்கள். எனவே பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளவும்.  மற்றபடி முடிவு சாதகமாகவே அமையும்.

வேலையில் திருப்தி காண்பீர்கள். வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். இதனால் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். சிறிய சிரமங்களுக்குப் பிறகே புதிய குத்தகைகள் கிடைக்கும். சிலருக்கு கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். பால் வியாபாரம் நன்றாக நடக்கும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் புதிய பதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். உங்களின் புகழும், செல்வாக்கும் உயரும். தொண்டர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். என்றாலும் கடினமாக உழைப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அனைத்து விஷயங்களையும் நன்றாக முடித்துவிடுவீர்கள். உங்களின் விடா முயற்சியை சக கலைஞர்கள் பாராட்டுவார்கள். அவர்களால் சில வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்மணிகள் கணவரால் பாராட்டப்படுவார்கள். இதனால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும்.
அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவ-மணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் தேவைகள்  அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

பரிகாரம்: 

அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 5 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

2, 5, 6, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: திங்கள், செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்;

+ பதவி உயர்வு.

– வீண் விரயம்.

துலாம்

எதையும் லாப நஷ்ட நோக்கத்துடன் ஆராயும் குணமுடைய துலாம் ராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் நடுநிலைமையுடன் செயல்படுவீர்கள். உண்மை வாக்கிற்கு கட்டுப்பட்டவர்களாக நடப்பீர்கள். இதுவரை உங்களது ராசியில் இருந்த குருபகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து உங்களது ரண ருண ரோக ஸ்தானம்  அஷ்டம ஆயுள் ஸ்தானம்  தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். சனி தைரிய வீர்ய ஸ்தானத்திலும்  கேது சுக ஸ்தானத்திலும்  ராகு உங்களது தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குரு பெயர்ச்சியில் செய்தொழிலில் சிறிது பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மன உறுதியுடன் அவற்றை சமாளிப்பீர்கள். உங்களின் குறிக்கோளை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் பெரிய முதலீடுகளைச் செய்ய வழி ஏற்படாது. குடும்பத்தினர் ஓரளவுக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள். அதோடு கூட்டாளிகளும் பக்கபலமாக இருக்க மாட்டார்கள். எந்த முக்கிய முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும்.

மற்றபடி பொதுக்காரியங்களில் ஈடுபட்டு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.  அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதற்கேற்றபடி தேவையான மாறுதல்களைச் செய்வீர்கள். அதனால் அனாவசிய எண்ணங்களையும், சிந்தனைகளையும் மனதிலிருந்து அகற்றவும். பழைய தாக்கங்களை மறக்க முயற்சி செய்யுங்கள். மனோபலத்தை அதிகரிக்க அமைதியாகவும் டென்ஷன் இல்லாமலும் இறைவனின் திருநாமங்களை ஜபித்து வாருங்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். முன் கூட்டியே யோசித்து உங்கள் செயல்களை சிறப்பாக முடித்துவிடுவீர்கள். உங்கள் மனதில் உள்ளதை சுருங்கச் சொல்லி சரியாக விளக்கும் ஆற்றல் உண்டாகும். கிணற்றுத் தவளையாக இருந்தவர்கள் வெளியூர், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வார்கள்.

சமுதாயத்திற்கு ஏதாவதொரு வகையில் சேவை செய்து பெயரும், புகழும் பெறும் யோகம் உண்டாகும். குறைவான உடல் உழைப்புக்குக்கூட நிறைவான வருமானம் கிடைக்கும். இல்லத்தில் குதூகலம் நிறையும். ஆன்மிகம், தத்துவம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். குடும்பத்திலும் வெளியிலும் உங்களின் செல்வாக்கு உயரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளுடனான உங்கள் தொடர்பு அனுகூலமான திருப்பங்களைக் கொண்டுவந்து சேர்க்கும். அதேநேரம் மனதில் கற்பனை பயங்களும் உண்டாகலாம். அவ்வப்போது எதையோ இழந்துவிட்டது போன்ற மனக் கவலைகளுக்கு ஆளாவீர்கள். இதனால் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்யவும். மேலும் ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். கடினமான உழைப்புக்கு இடையே சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் காலகட்டத்தில் சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாகவும் பக்கபலமாகவும் நடந்துகொள்வார்கள். மேலும் அலுவலக வேலைகளில் பளு இருக்காது. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு இது லாபகரமான அமைப்பு. பொருட்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாளுவீர்கள். என்றாலும் கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். சிலர் புதிய பதவிகளில் அமர்வீர்கள்.

தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். உங்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

பரிகாரம்: 

குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

2, 6, 7, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை:  திங்கள், செவ்வாய், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி.

+ முதலீடு அதிகரிக்கும்.

– சகோதர சகோதரிகளிடம் மனகிலேசம்.

 

விருச்சிகம்

எதையும் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெறும் விருச்சிக ராசி அன்பர்களே,  நீங்கள் எதையும் மறைத்துப் பேசத் தெரியாதவர்கள். மற்றவர்களின் அன்பிற்கு தலைவணங்கும் நீங்கள் யாரையும் அவமதிக்க மாட்டீர்கள். இதுவரை உங்களது விரய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ராசிக்கு மாறுகிறார். ராசியில் இருந்து உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம்  சப்தம் களத்திர ஸ்தானம்  பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். சனி தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும்  கேது தைரிய வீர்ய ஸ்தானத்திலும்  ராகு உங்களது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடந்து மன நிம்மதி அடைவீர்கள். அனைத்து விஷயங்களும் படிப்படியாக சீராகும். வருமானம் உயரும். வீண் விரயம் ஏற்படாத வகையில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீர்கள். செய்தொழிலில் நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். புதியவர்கள் கூட்டாளிகள் ஆவார்கள்.

இதனால் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். ஆற்றல் மிகுந்தவர்களையும், திறமைசாலிகளையும் உறுதுணையாகக் கொண்டு புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் இல்லம் தேடி விருந்தினர்கள் வருவார்கள். மற்றவர்கள் முடியாது என்று விட்டுவிட்ட காரியங்களைக் கூட நீங்கள் சுலபமாகச் செய்துமுடிப்பீர்கள். உங்களின் மன பலத்தை மூலதனமாக்கிகொள்வீர்கள். திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடக்கும். குடும்பத்தாருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள்.

மற்றபடி வெளி ஆட்களிடம் உங்களின் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை விட்டுக் கொடுத்து முடித்துக்கொள்ளவும். நம்பகமான கூட்டாளிகளிடம் முக்கியமான வேலைகளைப் பிரித்துக் கொடுத்து அவர்களின் விருப்பப்படி செயல்பட அனுமதிப்பீர்கள். அனுபவசாலிகளின் வழிகாட்டுதலின் படி குறித்த காலத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களின் காரியங்கள் நேர்த்தியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் ஒத்துழைப்புடன் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பெற்றோர் வழியில் சில மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். உடன் பிறந்தோரால் அனாவசியப் பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் அவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அனாவசியமான பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும் பயணங்களின் போது கவனம் தேவை. மற்றபடி பிள்ளைகளுக்கு சிறப்பான வருமானம் தரும் உத்யோகம் கிடைக்கும்.

எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் வாக்குகொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ வேண்டாம். உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைப்பீர்கள். உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நல்லபடியாக முடியும். கூட்டாளிகள் உங்களை நம்பிப் புதிய முதலீடுகளில் ஈடுபட சம்மதிப்பார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று உங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இதனால் சக வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

உங்களுக்கு கட்சியில் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உட்கட்சிப் பூசல்களில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வதே புத்திசாலித்தனம். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்கு முடித்துக் கொடுத்த பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெற முயற்சிக்கவும். ரசிகர்களின் மனம் புண்படாத வகையில் நடந்து கொள்ளுங்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பார்கள். எனவே  அவர்களின் மனம் குளிர நடந்துகொண்டு அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பு, பாசம்  அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டு உங்கள் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். மாணவ-மணிகள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதனால் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். மற்றபடி விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு செலுத்தி வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் தும் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

1, 3, 7, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்.

+ உண்மையை உணர்தல்.

– எடுத்த காரியங்களில் சுணக்கம்.

 

தனுசு

உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு குருவாக விளங்கும் தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணமுடையவர். பாரபட்சமின்றி அனைவரிடமும் அன்பு காட்டுவீர்கள். இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார். விரய ஸ்தானத்தில் இருந்து உங்களது சுக ஸ்தானம்  ரண ருண ரோக ஸ்தானம்  அஷ்டம ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். சனி ராசியிலும்  கேது தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும்  ராகு உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். உங்களின் சுய முயற்சியினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். அதிக வேகமில்லாமல் நிதானமாகவும், பொறுப்புடனும் காரியமாற்றுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும்.

வீண் அபவாதங்களிலிருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம் ஆகியவை நடக்கும். உங்களின் இரக்க குணத்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். அதேநேரம் சிலருக்கு முழங்கால் வலி, மூட்டு வலி ஆகியவை ஏற்படலாம். குடும்பத்தில் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். அதோடு சில நேரங்களில் உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் போகலாம். பெரியோர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிடலாம். மற்றபடி குடும்பத்தில் அமைதி நிலவும்,. தாயார் வழி உறவுகள் சீராகும். உங்களுக்கு எதிராக கலகம் செய்தவர்கள் அடங்குவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு உண்டாகும். புதியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள். உங்களின் செயல்களில் விவேகம் அதிகரிக்கும். அரசாங்கத்திடமிருந்து பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சிலருக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். முக்கியமான பூஜைகள், ஹோமங்களை இல்லத்தில் நடத்துவீர்கள். அசையாச் சொத்துகளால் வருமானம் வரத் தொடங்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். உங்களின் முகத்தில் வசீகரம் உண்டாகும். பிறரைக் கவரும் வகையில் பேச்சுத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகளைச் செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு தக்க அறிவுகளை வழங்கி அவர்களை உங்களுக்கு ஆதரவாக்கிக் கொள்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியால் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை உணர்வு பூர்வமாக பரிசீலித்து உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். பணியிட மாற்றம் கிடைக்க வாய்ப்பில்லை.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறாது.  எனவே இத்தகைய முயற்சிகளைத் தவிர்த்து பழைய கடன்களைத் திருப்பிச்செலுத்தவும். அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்ளவும். கட்சி மேலிடத்திடம் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளால் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும்.

அதனால் புகழைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்கள் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். சக கலைஞர்களுடன் நட்புடன் நடந்து கொண்டு புதிய ஒப்பந்தங்களைப் பெறவும். ரசிகர்களின் ஆதரவுடன் இனிய அனுபவம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்மணிகள் கணவருடன் விட்டுக்கொடுத்துப் பழகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவ-மணிகள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். அதேநேரம் புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம்.

பரிகாரம்: 

ராகு-கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் சத்குருவே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

1, 3, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்.

+ அதிகமாக உழைத்தல்.

– பரபரப்பு மற்றும் உடல்நலம் பாதித்தல்.

 

மகரம்

எவருக்கும் பயப்படாமல் தன் மனதில் பட்டதை சபையில் பேசும் குணமுடைய மகர ராசி அன்பர்களே, நீங்கள் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் சிறந்தவர். தெய்வ வழிபாடுகளில் அதிக நாட்டம் கொண்டவர். இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருந்த குருபகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து உங்களது தைரிய வீர்ய ஸ்தானம்  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம்  சப்தம களத்திர ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். கேது ராசியிலும், ராகு சப்தம ஸ்தானத்திலும்  சனி விரய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப்பெயர்ச்சியில் உங்களின் செய்தொழிலில் நல்ல  முன்னேற்றம் ஏற்படும். செல்வ வளம் பெருகும். உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் பெயரும், புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வீர்கள்.

பெரியோரிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். உங்களின் எண்ணங்களில் ஏற்பட்ட தடுமாற்றம் நீங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உங்களின் தேகத்தில் புதிய பொலிவு உண்டாகும். உங்களின் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். விலகிச் சென்றிருந்த உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். வருமானம் இரட்டிப்பாகும். பழைய கடன்களை வட்டியும் முதலுமாக திருப்பிச் செலுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் பாகப்பிரினை உண்டாகி உங்களுக்கு உரிய பங்கு கிடைத்துவிடும். அதோடு கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றி புகழடையும் காலகட்டம் இதுவென்றால் மிகையில்லை. நண்பர்களுடன் இணக்கமாகச் செயல்படுவீர்கள்.

வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கைக்கு வந்து சேரும். உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயங்களை நண்பர்கள் மறந்து விடுவார்கள். அதேநேரம் சில அனாவசிய செலவுகளையும் செய்ய நேரிடும். குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றை பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத் தீர்த்துக் கொள்வீர்கள். உங்களுக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் நஷ்டங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செய்தொழிலில் மாற்றம் செய்ய  நினைக்கும்போது முன் கூட்டியே கூட்டாளிகளுடன் விவாதித்து சுமுகமான நிலைமையை ஏற்படுத்திக்கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருந்தாலும் அவ்வப்போது உஷ்ணம் சம்பந்தமான உபாதைகளுக்கு ஆளாவீர்கள். எனவே கவனம் தேவை.

நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை நடுநிலையோடு இருந்து தீர்ப்பீர்கள். அதோடு தீயோரின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. இதனால் தேவையற்ற சூழ்நிலைகளையும் தவிர்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களின் பெயரில் பணம் வாங்கித் தரவும் வேண்டாம். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது. வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். சில நேரங்களில் கடும்போட்டிகளை சந்திக்க நேரிடும். இதனால் மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டிவரும். எதிலும் விழிப்புடன் இருப்பது நல்லது.

நன்கு ஆலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். கால்நடைகளால் நன்மைகள் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். நெல் விளைச்சல் சாதகமாக இருக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகள் ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் பலனடைவீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். சக கலைஞர்களும் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். மாணவமணிகள் கல்வியிலும் உள்ளரங்கு விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சி தேவை.

பரிகாரம்: 
பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

 

சொல்ல வேண்டிய மந்திரம்: 
“ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

 

அதிர்ஷ்ட எண்கள்: 
2, 6, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை:  ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி;

+ வாக்கு வன்மை அதிகரிக்கும்.

– சுபநிகழ்ச்சிகளில் சுணக்கம்.

 

கும்பம்

கேட்பவர் அனைவருக்கும் உதவிகள் செய்யும் கும்ப ராசி அன்பர்களே, நீங்கள் வெளுத்ததெல்லம் பாலென நம்பும் குணமுடையவர்கள். உங்களிடம் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு இருக்கும். இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். தொழில் ஸ்தானத்தில் இருந்து உங்களது தனவாக்கு குடும்ப ஸ்தானம்  சுக ஸ்தானம்  ரண ருண ரோக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ரண ருண ரோக ஸ்தானத்திலும்  சனி லாப ஸ்தானத்திலும்  கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குரு பெயர்ச்சியில் செய்தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயர் வாங்குவீர்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு தக்க உதவிகளைச் செய்து அவர்களை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்வீர்கள். சமூக நோக்குடன் உங்களின் காரியங்களைச் செய்வீர்கள். நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும்.

செய்தொழில் நன்றாக நடப்பதால் புதிய கடன்கள் வாங்க நேரிடாது. சிலருக்கு வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும் நிலைமை உண்டாகும். பிறரின் பொறாமைகளுக்கும், போட்டிக்கும் ஆளாக நேரிடும் என்பதால் கவனம் தேவை. நீங்கள் தொடுத்திருந்த வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படாது. மற்றபடி வெகுதூரத்திலிருந்து நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். மேலும் அவசியமான விஷயங்களுக்காக திடீரென்று அவசரப் பயணங்களைச் செய்ய நேரிடும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு உயரும். உங்களின் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். நினைத்த எண்ணங்கள் கச்சிதமாக செயல்வடிவம் பெறும். கடினமான விஷயங்களிலும் தோலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவீர்கள். உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள்.

எதிரிகளால் இன்னல்கள் ஏற்படாது. உற்றார், உறவினர்கள் உங்கள் பேச்சுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குறைந்த அளவுக்கு முதலீடு செய்து விருப்பமான வாகனங்களை வாங்குவீர்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் நீங்கும். உங்களின் நேர்மையான போக்கை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் சூட்சும அறிவு வேலை செய்யத் தொடங்கும். எதிர்பாராத வகையில் சௌபாக்கியங்கள் தேடி வரும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நெடுநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த உங்கள் விண்ணப்பம் அரசாங்கத்தால் சாதகமாக பரிசீலிக்கப்படும். இதனால்  சலுகைகள் கிடைக்கும். மனதிற்கினிய பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை திட்டமிட்டு முன்கூட்டியே செய்யவும். சில நேரங்களில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். அதேசமயம் பணவரவுக்குத் தடைகள் வராது. எதிர்பார்த்த ஊதிய உயர்வு சரியான நேரத்தில் வந்து சேரும். ஆனாலும் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்றாகவே நடக்கும். கடன்களைப் பெற்று கடையைச் சீரமைப்பீர்கள். புதிய சந்தைகளில் உங்கள் பொருட்கள் விற்பனையாகும். அரசியல்வாதிகள் வெற்றிகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படும். ஆகவே உங்கள் திட்டங்களைப் பொறுமையாக செயல்படுத்தவும். அதேநேரத்தில் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.

சில சமயங்களில்  உங்கள் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். எனவே யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்து நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.  சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சீராக இருக்கும். அதேசமயம் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சூடான வார்த்தைகளைப் பேச வேண்டாம். மாணவ-மணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்யத்தை வளர்த்துக்கொள்வீர்கள். அதேநேரம் பெற்றோரின் ஆதரவு குறையும்.

பரிகாரம்: 

பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் நமோ நாராயணாய:” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

1, 4, 6, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி;

+ தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம்.

– வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு.
 

மீனம்

ஓய்வில்லாமல் உழைக்கும் குணமுடைய மீன ராசி அன்பர்களே, உங்கள் காரியத்தில் கண்ணாய் இருந்து எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். உங்களை நம்பி வந்தவர்களை உங்களுடன் வைத்து காப்பாற்றும் குணமுடையவர்கள். இதுவரை உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பாக்கிய ஸ்தானத்தில் இருந்து உங்களது ராசி தைரிய வீர்ய ஸ்தானம்  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும்  சனி தொழில் ஸ்தானத்திலும்  கேது லாப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். உற்றார், உறவினர்கள் நண்பர்களிடம் சுமுகமான உறவு தொடரும். உடல் உபாதைகள் நீங்கும்.  எதிர்பாராத புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

உங்களின் நேர்மையான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் விவாதத் திறமை அதிகரிக்கும். முக்கியமான விவாதங்களில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்தி, வகைப்படுத்தி செய்து காரியமாற்றுவீர்கள். விருப்பு, வெறுப்பின்றி அனைவருக்கும் உதவி செய்வீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் சாதனை புரிவீர்கள். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் தேவைகள் எளிதாகப் பூர்த்தியாகும். நீங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதி மன்றத்திற்கு வெளியில் சமாதானமாக முடியும். உங்கள் மீது அபாண்டபழி சுமத்தியவர்கள் தவறுகளை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார்கள். தெய்வ பலத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருப்பதால் வெளியூறுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும்.

பாக்கியஸ்தானத்திற்கு வரும் குருவால் புதிய செயல்களுக்கு அஸ்திவாரம் போடுவீர்கள். உறவினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். இல்லத்தில் களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கைக்கு வந்து சேரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு உங்களுக்கு உந்துசக்தியாக அமையும். உங்கள் செயல்கள் இடையூறுகளின்றி சுலபமாக நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.
உறுதியின்றி செய்த செயல்களில் ஒரு நிரந்தரப் பிடிப்பு ஏற்பட்டு மளமளவென்று நடக்கத் தொடங்கும். சில அனாவசியச் செயல்களுக்கு கைப்பொருள்களை இழந்த நிலை மாறும். மற்றபடி சகோதர, சகோதரிகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம். அவர்களுக்கு உதவி செய்ய நினைத்து சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். என்றாலும் அந்தப் பிரச்னைகள் தானாகவே விலகிவிடும். உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும். வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். காலதாமதம் ஏற்பட்டாலும் உங்களின் செயல்கள் வெற்றி பெறும். ஆனால் நண்பர்கள், கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. ஆகையால் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமடையாமல் கடமைகளைச் செய்து வரவும். பேச்சில் கண்ணியம் குறையாது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அதேசமயம் எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். போகப் போக உங்களுக்கு சாதகமற்ற நிலைமைகள் மாறிவிடும். பெண்மணிகள் புத்தாடை, அணிமணிகளை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பண வரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். மாணவ-மணிகள் முனைப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் பதற்றப்படாமல் ஈடுபடவும். அதேசமயம் உங்கள் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் நல்ல பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: 

சஷ்டிதோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது நன்மை.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஷம் ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

2, 6, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: திங்கள், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி;

+ பணவரவு மற்றும் வெளிநாடு செல்லுதல்.