குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை

0
73

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவர் கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப் பட்டு உள்ள குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

யாருக்கும் பாதிப்பு இல்லை

அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்தில் காலை மற்றும் மாலை என 2 வெளிநாட்டு விமானங்கள் வருகின்றன. இதில் 170 முதல் 250 வரையிலான பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.

இந்த மாதத்தில் பயணிகளுக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அல்லது கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

யாருக்காவது தொற்று கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஒரு படுக்கை வசதியுடன் கூடிய அறை கோவை விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளது. மேலும் தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.

பிரத்யேக வார்டு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள நகரங்களில் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி அல்லது மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் 10 படுக்கைகள் கொண்ட குரங்கு அம்மை வார்டு தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி சென்னையில் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் நாளை (இன்று) குரங்கு அம்மைக் கான பிரத்யேக வார்டு தொடங்கப்படும்.

குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர். நாடு முழுவதும் 15 ஆய்வகங்களை அமைக்க அறிவுறுத்தி உள்ளது. அதில் தமிழகத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க அனுமதி கேட்கப் பட்டு உள்ளது.

அந்த அனுமதி கிடைத்தால் கிங் இன்ஸ்டியூட் ஆராய்ச்சி மையத்தை ஆய்வகமாக பயன்படுத்த உள்ளோம்.

சோதனை சாவடிகளில் கண்காணிப்பு

கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால், தமிழக- கேரள எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் கண் காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகளுக்கு முகம் மற்றும் முழங்கைக்கு கீழ் பகுதியில் புதிதாக கொப்பளங்கள் உள்ளதா என்றும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

குரங்கு அம்மை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் ஸ்லைடுகள் மற்றும் போஸ்டர்கள் திரையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. நகர பகுதிகளில் பொது சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.