கோவை ராஜவீதி, இடையர்வீதி உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்களை குடோனில் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கோவை ராஜவீதியில் வடமாநிலத்தை சேர்ந்த நாகராம் (வயது 30), பேராராம் (28) ஆகியோரின் குடோன்களில் விற்பனைக்காக பதுக்கிவைத்து இருந்த 117 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது போல் இடையர் வீதியில் ரமேஷ், ஹரிஷ் தேவகி ஆகியோரது குடோன்களில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 103 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் கூறியதாவது:-
கோவை ராஜவீதி, இடையர்வீதியில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தி ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன. மேலும் அந்த குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது. புகையிலை யின் மாதிரி பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. அதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தயார் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். கலப்பட டீ தூள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்களுக்கு குடோன்களை வாடகைக்கு விட்டால் வழக்கு தொடுக்கப்படும். அந்த வழக்கு முடியும் வரை குடோன்களை பயன்படுத்த முடியாது..
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்செல்வன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலசுப்ரமணி, விஜயராஜ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.