குடும்ப நீதிமன்றத்தில் 4,000 வழக்குகள் நிலுவை! விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

0
5

கோவை; குடும்ப நீதிமன்றங்களில் கடந்தாண்டு வரை 4,000 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. விவகாரத்து வழக்கு அதிகரிக்க, தம்பதியர் இடையே ஏற்படும் ‘ஈகோ’தான் முக்கிய காரணம் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

தம்பதியினருக்கிடையே ஏற்படும் குடும்ப பிரச்னையால், முறைப்படி விவாகரத்து பெறுவதற்கு குடும்ப நீதிமன்றங்களை நாடுகின்றனர். கோவையில் இரண்டு குடும்ப நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

இந்நீதிமன்றங்களில் விவாகரத்து, கணவன் அல்லது மனைவியுடன் சேர்த்து வைக்க கோருதல், குழந்தைகள் பாதுகாப்பு கோருதல், ஜீவனாம்சம் உட்பட பல்வேறு நிவாரணம் கேட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

வழக்குகள் அதிகரிப்பு

விவாகரத்து வழக்குகளில், தினந்தோறும் கோர்ட் வாசலில் காத்திருப்போரில், 25- 30 வயதுக்கு உட்பட்ட இளம் தம்பதிகளே அதிகம்.

திருமணமான சில மாதங்களில், அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது.

வழக்கு தாக்கல் செய்து, ஆறு மாத காலத்திற்குள் விசாரணை முடித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, குடும்ப நல சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிப்பதில், தாமதம் ஏற்படுகிறது.

கொரோனாவும் காரணம்

கோவை குடும்ப நீதிமன்றத்தில், 2019ல், 4,000 வழக்கும், 2020 ல், 4,400 வழக்கும் நிலுவையில் இருந்தது. 2021 ல், 5,000 ஆக அதிகரித்தது.

அந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், விசாரணை முடங்கி நிலுவை வழக்கு மேலும் அதிகரிக்க காரணமானது. 2022, ஜூனுக்கு பிறகு தொடர் விசாரணை நடத்தப்பட்டதால், நிலுவை வழக்கு எண்ணிக்கை முன்பை விட குறைந்தது.

2023ல், 2,500 புதிய வழக்குகள், 2024ல், 2,600 புதிய வழக்குகள் என, மொத்தம், 5,100 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 2023 ல், 2,500 வழக்கு, 2024 ல்,

2,000 வழக்கு என மொத்தம், 4,600 வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது.

கடந்தாண்டு வரை, இரண்டு நீதிமன்றங்களில் மொத்தம், 4,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரண்டு கோர்ட்டுகளில் மாதம்தோறும், சராசரியாக, 200 – 250 வரை புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

 

விரிவாக சொல்கிறார் வழக்கறிஞர்

தம்பதியர் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து, கோவை வக்கீல் ஆர்.ராஜ்குமார் கூறியதாவது: கணவன் – மனைவிக்கிடையே விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல், நீயா, நானா என்ற ‘ஈகோ’வுடன் இருப்பதே, விவகாரத்துக்கு முக்கிய காரணம். இருந்தாலும், அவர்களுக்குள் ஏற்படும் மற்ற பிரச்னைகளும் பிரிவுக்கு காரணங்களாக கூறலாம். கணவனை விட மனைவி அதிக சம்பளம் பெறுதல், திருமணத்திற்கு முந்தய காதல், திருமணத்திற்கு பிறகும் தொடருதல், தனிக்குடித்தனம், மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம், முறையற்ற பாலியல் தொடர்புகள், வரதட்சணை கொடுமை, கணவன்-மனைவி வேலை காரணமாக பிரிந்து இருத்தல், சமூக ஊடகங்களில் மூழ்குதல், குழந்தை பேரின்மை, வசதி குறைவு, தாயார் வீட்டிற்கு மனைவி அடிக்கடி செல்லுதல், வயதான பெற்றோர்களை கவனிக்க தவறுதல், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விவாகரத்து வரை செல்கின்றனர். இதனால், நீதிமன்றங்களில் வழக்கு அதிகரிக்கிறது. கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டால், பெரியவர்கள் உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். முக்கியமாக, தம்பதியருக்கு ‘கவுன்சிலிங்’ கொடுக்க, ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, வக்கீல் ஆர்.ராஜ்குமார் கூறினார்.