குடியிருப்பு பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் – போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சு

0
78
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி எல்.ஐ.ஜி. காலனி, அய்யாசாமி லே அவுட் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இந்ந பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகை பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் அந்த பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் நிதிதிரட்டி, குடியிருப்பு பகுதியில் 9 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இந்த கண்காணிப்பு கேமராக்களை நேற்று பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தொடங்கி வைத்து, பொதுமக்களிடையே பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொள்ளாச்சி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து சிக்னல், முக்கிய இடங்கள், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் போலீசாரே கண்காணிப்பு கேமரா பொருத்துவது சாத்தியமற்றது.
ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவு செய்து வீடுகளை கட்டும் பொதுமக்கள், சில ஆயிரம் ரூபாய் செலவழித்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வருவதில்லை.
குடியிருப்பு பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வரவேண்டும். அப்போது தான் குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்களை விரைவாக பிடிக்க முடியும்.
வீடுகளில் அதிக அளவு பணம், நகைகள் வைத்து இருக்க கூடாது. நகைகளை வங்கி பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். வீடுகளுக்கு தரமான கதவுகள், பூட்டுகள் பயன்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகிறதா, காட்சிகள் பதிவாகிறதா என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.