காட்டு யானைகள்
கோவை மதுக்கரை வனச்சரக பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்து வருகிறது. அப்போது குடியிருப்பையொட்டி விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் சோளம் உள்ளிட்ட பயிர்களையும் தின்றும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 1.20 மணியளவில் மதுக்கரை வனத்தை விட்டு 6 காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறின. அந்த காட்டு யானைகள் நேராக மதுக்கரை வனத்தில் இருந்து பச்சாபாளையம் நோக்கி வந்தன.
வனத்துக்குள் விரட்டியடிப்பு
அதிகாலையில் வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல் கோவைப்புதூர் பிரஸ்என்கிளேவ் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் 6 யானைகளும் குட்டியுடன் நுழைந்தது. அப்போது யானைகள் பிளிரியவாறு சென்றன.
இதனால் அதிகாலையில் வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்த பொதுமக்கள் எழுந்தனர். ஊருக்குள் குட்டியுடன் யானை புகுந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் இருந்தபடியே தெருவில் நடந்து சென்ற யானை கூட்டத்தை பார்த்து செல்போனில் வீடியோ எடுத்தனர்.
உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த யானை கூட்டம் அதிகாலை 3 மணி வரை அங்கேயே சுற்றியது. அதன் பிறகு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கோவைப்புதூர் பகுதியில் யானை கூட்டம் நுழைந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.