குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கோரிக்கை : ‘பூஸ்டர் ஹவுஸ் ‘ பகுதியில் குளோரினேற்றம் அவசியம்!

0
20

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள பூஸ்டர் மேல்நிலைத் தொட்டிகளில், இரண்டாம் கட்டமாக குளோரினேற்றம் செய்து, கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு, அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதான குழாய் வாயிலாக, கிராமங்களில் உள்ள தரைமட்ட மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

அவ்வகையில், கடைக்கோடி கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடையுயும் வகையில், ஆவல்சின்னாம்பாளையம் மற்றும் அனுப்பர்பாளையத்தில் ‘பூஸ்டர் ஹவுஸ்’ அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நீர் உந்தும் மோட்டார் வாயிலாக மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மீண்டும் குழாய் வாயிலாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

ஆனால், நீரேற்றும் நிலையத்தில், ஒருமுறை மட்டுமே குளோரினேற்றம் செய்யப்படும் நிலையில், குழாய் உடைப்பு, கசிவு காரணமாக, குளோரின் ஆவியாகி விடுகிறது. கிராமங்களுக்கு சென்றடையும் தண்ணீரில் குளோரின் அளவு முற்றிலும் குறைந்து விடுகிறது.

இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்துவதால், நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், நீண்ட நாள் பாத்திரங்களில் பிடித்து வைத்து பயன்படுத்தும் போது காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு, ‘பூஸ்டர் ஹவுஸ்’ மேல்நிலை தொட்டிகளில் இரண்டாம் கட்டமாக குளோரினேற்றம் செய்ய வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிராம மக்கள் கூறியதாவது:

அம்பராம்பாளையத்தில் குளோரினேற்றம் செய்து, குழாய் வாயிலாக பல கி.மீ., துாரம் எடுத்துச் செல்லும் தண்ணீர் கிராமங்களைச் சென்றடையும் போது, ஆவியாகி விடுகிறது. இதற்கு, ‘பூஸ்டர் ஹவுஸ்’ மேல்நிலைத் தொட்டிகளிலும் குளோரினேற்றம் செய்ய வேண்டும்.

அதேபோல, ஊராட்சிகளில், 50 வயதை கடந்த குடிநீர் ஆப்ரேட்டர்களே அதிகம் உள்ளனர். இவர்கள், மேல்நிலை தொட்டியின் மீது ஏறி, குளோரினை தண்ணீரில் கலப்பது குதிரை கொம்பாக உள்ளது.

குறிப்பாக, 60 அடி உயரத்தில் உள்ள தொட்டியின் மீது ஏற முடியாமல், ஆப்ரேட்டர்கள் திணறுகின்றனர். இதனால், பி.வி.சி., குழாய்கள், ‘கேட் வால்வு’ மற்றும் திறந்து மூடும் அமைப்புகளுடன், சிறிய கிட் அமைக்கப்பட்டு, ‘காஸ்’ அல்லது ‘லிக்யூட்’ குளோரினேஷன் முறையைக் கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால், கிராமங்களைச் சென்றடையும் குடிநீரில் புழு உருவாகாது. கிராமங்களில் தண்ணீர் வாயிலாக பரவும் நோய் பாதிப்பும் தடுக்கப்படும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.