குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலிகுடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை; கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 600 பேர் கைது

0
95

கோவை நகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரியும், சீரான முறையில் குடிநீர் வழங்க வற்புறுத்தியும், வெளிநாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதை வற்புறுத்தியும் தி.மு.க. சார்பில் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று காலை தி.மு.க.வினர் ஏராளமானோர் கட்சி கொடிகளுடன் திரண்டனர்.பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் தி.மு.க.வினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. வினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து கார்த்திக் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

கோவையில் பல இடங்களில் மாதத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் வருகிறது. குடிநீர் வினியோகமும் முறையாக இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று முன்கூட்டியே தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கோவையில் குடிநீர் வினியோக உரிமையை வெளிநாட்டு நிறுவனத்துக்கு தாரைவார்த்து உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அரசும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும், என்று கூறினார்.

முற்றுகையில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ., முத்துசாமி, நாச்சிமுத்து, மெட்டல் மணி, எஸ்.எம்.சாமி, நந்தகுமார், மீனாலோகு, ராஜ ராஜேஸ்வரி, மகுடபதி, மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ஆர்.கணேஷ், குப்புசாமி உள்பட 600 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முற்றுகை போராட்டம் காரணமாக டவுன் ஹால் பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.