குடிநீர் பஞ்சத்திற்கு ஏரி குளங்களை பராமரிக்காதது தான் காரணம் கோவையில் கமல் பிரச்சாரம்

0
138
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஜி. மயில்சாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை, சந்திராபுரம், செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு, சூலூர் ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது டார்ச்லைட் சின்னத்தில் வாக்கு கேட்டு கமல்ஹாசன் பேசியதாவது:-
வழக்கமாக தேர்தல் பிரசாரத்தின்போது தலைவர்கள் பேசிவிட்டு செல்வார்கள். வேட்பாளர்கள் கும்பிட்டுக் கொண்டே நிற்பார்கள். ஆனால் மக்கள் நீதி மய்யத்தில் அப்படி இல்லை. வேட்பாளரும் உங்களிடம் பேசுவார். நாங்கள் செயல்வீரர்களாக இருப்பதையே விரும்புகிறோம். வாய்ச் சொல்லில் வீரராக இருந்து பலன் இல்லை.
தமிழகம் எங்கும் இருக்கும் ஒரு பிரச்சினை இங்கேயும் இருக்கிறது. அது குடிநீர் பஞ்சம். அது ஏதோ இயற்கை நம் மீது விதித்த தண்டனை என்று சொல்லிக் கொள்கிறார்கள். அது தவறு. கவனிக்காமல் விடப்பட்ட விஷயம் தான் அது. இந்த பகுதியில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கிறார்கள். பெண்கள் குடிநீருக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை தற்போது உள்ளது. இதனால் அவர்களின் நேரம் வீணாகிறது. வீட்டுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க முடியும் என்று மக்கள் நீதிமய்யம் நினைக்கிறது. குடிநீருக்காக காத்திருக்கும் நிலையை மாற்றினால் இந்தியா வல்லரசாக மாறும் வாய்ப்பு உள்ளது.
நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய நீர்நிலைகளான ஏரி, குளங்களை பராமரிக்காமல் விட்டு விட்டனர். அதை எப்படி பிளாட் போட்டு விற்று ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம். ஆற்று மணலை அள்ளி எப்படி வியாபாரம் செய்யலாம் என்பதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நீர்நிலைகளை அவர்கள் கவனிக்கவில்லை. மக்களுக்கு செய்ய வேண்டிய செலவை அவர்கள் செய்யவில்லை. சிறிய கிராமத்தில் சாக்கடை வசதி, குடிநீர் வசதி கூட செய்யப்படாமல் உள்ளது. இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியும். திருடாமல் இருந்தால் முடியும். இந்த கட்சியின் பெரும் பலம் தாய்மார்களும், இளைஞர்களும் தான். அதை நாங்கள் மறக்க மாட்டோம். மக்கள் நீதிமய்யத்துக்கு பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு பெருகிக் கொண்டே வருவது எங்களுக்கு பெருமையாக உள்ளது. உங்கள் கோரிக்கைகளை செயல்படுத்த தயாராக உள்ளோம். அதை செயல்படுத்த நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் நாளை நமதே.
இங்கே ஆஸ்பத்திரி வசதி வேண்டும் என்று கேட்டார்கள். இதற்கு முன்பிருந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காதில் அது விழுந்திருக்கும். ஆனால் அவர்கள் செயல்படுத்தவில்லை. இனி செயல்பட வைப்போம். தமிழகத்தில் நல்லவர்களே இல்லை என்ற கவலை வேண்டாம். நேர்மையானவர்கள் இங்கேயும் இருக்கிறார்கள். அதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கு வந்திருப்பவர்கள் யாரும் காசுக்காக வந்தவர்கள் அல்ல. எனவே தமிழகத்தில் நேர்மை இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வர வேண்டும். பல குடும்ப தலைவிகள் முடிவு எடுத்து விட்டனர். நமது குடும்பம் மக்கள் நீதி மய்யம் என்று. மக்கள் நீதி மய்யத்துக்கு இனி ரசிகர்கள் மட்டும் போதாது. தொண்டர்களும் வேண்டும்.
செஞ்சேரிமலை பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை, தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு நினைத்தால் இங்கு கலை கல்லூரி அமைக்க முடியாதா? நினைக்கவில்லை என்பது தான் உண்மை. அதை செய்ய வைப்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் வேலை. எந்த காரியத்திலும் மக்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அது தான் மக்கள் நீதிமய்யத்தின் நோக்கம்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
முன்னதாக கோவை விமானநிலையத்தில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு மிகப்பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது. பல்லடம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி பாலமுருகன் உயிரிழந்த விவகாரத்தில் நான் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருப்பது கணவனை இழந்த மனைவியின் குரல் அல்ல. யாரோ ஒருவரின் தூண்டுதலால் பேசுகிறார். மக்கள் நீதி மய்யத்தினர் அவரது குடும்பத்தை பார்க்க செல்லவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சவுகரியமாக பேசுகின்றனர். இந்த விவகாரத்தில் கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும்