குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி

0
70

குடிநீர் வீணானது

பொள்ளாச்சி அருகே ஆத்து பொள்ளாச்சி பகுதியில் இருந்து குறிச்சி குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆத்து பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, சாலைபுதூர், சர்வீஸ் சாலை வழியாக குனியமுத்தூர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்கள் கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் சாலை வழியாக செல்கிறது.

கிணத்துக்கடவு பகுதியில் சர்வீஸ் சாலையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில், உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. மேலும் சர்வீஸ் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. அதேபோல் குழாயில் உடைந்து வெளியேறும் பகுதியில், சாலையில் குழி ஏற்பட்டது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக கோவை செல்லும் வாகன ஓட்டிகள் க அவதியடைந்தனர்.

சரிசெய்யும் பணி

இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று காலை குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் குடிநீர் குழாயில் உடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு அதனை சீரமைக்க திட்டமிட்டனர். தொடர்ந்து குழாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு, குழாயில் விரிசல் ஏற்பட்ட பகுதியை கண்டறிந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 இடங்களில் ஏற்பட்ட விரிசலை குடிநீர் வாரிய பணியாளர்கள் சரி செய்தனர். இந்த பணிகளை இளநிலை பொறியாளர் சரவணன், உதவி நிர்வாக பொறியாளர் பட்டண் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இதே சாலையில் மற்றொரு கூட்டு குடிநீர் திட்டமான சூளேஸ்வரன்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணி முடியாமல் உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரும் சர்வீஸ் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடந்ததால், காலை முதல் இரவு வரை அனைத்து பஸ்களும் மேம்பாலம் வழியாக சென்று அரசம்பாளையம் பிரிவில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.