கிணத்துக்கடவில் குடிநீர் குழாய் உடைந்ததால் சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குடிநீர் குழாயில் உடைப்பு
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிக்கு ஆத்துபொள்ளாச்சி பகுதி யில் இருந்து அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி -குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த குடிநீர் திட்ட குழாய்கள் பொள்ளாச்சி- கோவை 4 வழிச் சாலையின் அருகே கிராமங்க ளுக்கு செல்லும் சர்வீஸ் சாலை அருகே செல்கிறது.
குறிச்சி- குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வினி யோகம் செய்யும் போது திடீரென்று மின்தடை ஏற்பட்டால் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படும் போது தண்ணீர் கசிந்து அதிக அளவில் வெளியேறுகி றது.
வாகன ஓட்டிகள் அவதி
அந்த வகையில் கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டுபுதூரில் இருந்து சாலைப்புதூர் வழியாக கிணத்துக்கடவு வரக்கூடிய சர்வீஸ் சாலையில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால் அந்த இடங்களில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வீணாக செல்கிறது. அந்த ரோடுகளில் குழி ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த தண்ணீர் சர்வீஸ் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
விபத்து அபாயம்
மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் குழி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இது குறித்து கல்லாங்காட்டுபுதூர், சாலைப்புதூரை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு அருகே உள்ள ஊருக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் 3 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால் ரோட்டில் தண் ணீர் அடிக்கடி பெருக்கெடுத்து ஓடி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலையில் இரவு நேரங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
போராட்டம்
ஆனால் குடிநீர்குழாய் உடைப்பை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே குடிநீர் வீணாவதை தடுக்கவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கா விட்டால் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.