கோவை, ஜன. 12: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பங்களை, ஜனவரி 11ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்தார். அதன்படி, மாநகராட்சிக்கு கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, சென்ட்ரல் என ஐந்து மண்டல அலுவலகங்களில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, நேற்று மக்கள் குவிந்தனர்.
புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு தேவையான வீட்டின் பத்திர நகல், சொத்து வரி செலுத்திய ரசீது நகல் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு புகைப்பட நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கினர். ஒவ்வொரு மண்டலத்திலும் சராசரியாக சுமார் 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. இவற்றை சரிபார்த்து, உரிய டெபாசிட் தொகை பெறப்பட்டு, விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துவங்கும் என மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.