கீழடி நாகரிகத்தை சிந்து சமவெளி நாகரிகத்துடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது

0
7

கோவை, ஜன.9: கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் உயராய்வுத் துறை மற்றும் தொல்லியல் மரபு மன்றம் இணைந்து தேசியக் கருத்தரங்கத்தை நடத்துகின்றன. 2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கம், நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் துறை சார்ந்து பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் தொல்லியலில் இன்றைய போக்குகள் என்ற தலைப்பில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறை தலைவரும், பேராசிரியருமான ஒய்.சுப்பராயலு துவக்க உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் நிகழ்த்தப்படும் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் பழம் பெருமைகளை மற்ற நாடுகளில் உள்ள பழம்பெருமைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அகழாய்வுகள் நிதானமாக செய்ய வேண்டிய
ஒன்று. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் வாழ்க்கை, அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் குறித்த எழுத்து சான்றுகள் நம்மிடம் இல்லை. அதனால் அவற்றை அறிய தொல்லியல் சான்றுகள் கைகொடுக்கும்.
தொல்லியல் அகழ்வாய்வுகளை அக்கறையுடன் செய்ய வேண்டும். மண்ணை தோண்டும்போது கடைசித்தட்டில்தான் சங்ககால பொருட்கள் இருக்கும். தொல்லியல் அகழாய்வில் உள்ள ஏற்றத்தாழ்வு போக்குகள் மாற வேண்டும். பஞ்சாப் மாநிலத்திலும், பாகிஸ்தான் நாட்டிலும் தான் சிந்து சமவெளி நாகரீகம் இருந்தது. அதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தான் உரிமை கொண்டாட முடியும். கீழடி நாகரிகத்திற்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடைவெளி உள்ளது.
இந்த இரண்டு நாகரீகங்களையும் ஒப்பிடுவது பொருத்தமானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எழிலி, துணை முதல்வர் ஜெகதீசன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.