கிராமப்புற நுாலகங்களுக்கு தயாராகிறது புதிய கட்டடம்

0
4

கோவை: கோவை கிராமப்புறங்களில் உள்ள 55 நுாலகங்களுக்கு, 500 சதுரடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில், 191 அரசு நுாலகங்கள் உள்ளன. மாநகர பகுதியில் மட்டும், 66 கிளை நுாலகங்கள் உள்ளன. இதில், 27 நுாலகங்கள் முழு நேரமாகவும், மற்றவை பகுதி நேர நுாலகங்களாகவும் செயல்படுகின்றன.

கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், நவீன வசதிகள் கொண்ட நுாலகங்கள், கட்டப்பட்டு வருகின்றன.

நகர பகுதியில் உள்ள நுாலகங்கள், மராமத்து பணிகள் செய்யப்பட்டு, தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன.

ஆனால் கிராமப்புறங்களில் உள்ள முழுநேர, பகுதிநேர நுாலகங்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.

பல நுாலகங்களில், வாசகர்கள் அமர்ந்து படிக்க சரியான நாற்காலிகள், மின் விசிறி வசதி இல்லாமல் தவிக்கின்றனர். புதிய நுால்களும் இல்லை.

இந்நிலையில், கிராமப்புறங்களில் உள்ள நுாலகங்களை நவீனப்படுத்தி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘புதிய நுால்கள் வாங்கவில்லை’

கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலர் (பொறுப்பு) ராஜேந்திரன் கூறியதாவது:கோவையை பொறுத்தவரை கிராமப்புறங்களில் உள்ள நுாலகங்களுக்கு, தேவையான வசதிகள் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 55 நுாலகங்களுக்கு 500 சதுரடியில், புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. முழுநேரமாக செயல்படும் நுாலகங்களை, புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன. 15 நுாலகங்களின் கட்டடங்கள் பழுதடைந்து இருப்பதால், மறு கட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. 2021-22ம் ஆண்டுக்கு பிறகு, புதிய நுால்கள் வாங்கப்படவில்லை. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.