காஷ்மீர் விவகாரத்தையொட்டி, கோவையில் 1,000 போலீசார் குவிப்பு

0
97

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையொட்டி, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை கண்காணிக்க 5 கூடுதல் டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவை மேற்கு மண்டலத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் கோவை வந்து போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா, கமிஷனர் சுமித்சரண், மற்றும் 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நடத்தினார்.கோவை நகரில் போலீஸ் கமிஷனர் சுமித்சரண் மேற்பார்வையில், போலீஸ் துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், செல்வகுமார் ஆகியோர் தலைமையில் 14 உதவி கமிஷனர்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 120 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் உள்பட 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கோவையில் உள்ள கோனியம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள், கட்சி அலுவலகங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பஸ்நிலையம், ரெயில்நிலையம், விமானநிலையம் முன்பும் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.