காற்று வராவிட்டாலும் பரவாயில்லை… கதவை திறந்து வைக்காதீர்! திருட்டை தடுக்க போலீசார் எச்சரிக்கை

0
4

பெ.நா.பாளையம்; கோடை வெப்பம் காரணமாக, இரவு நேரத்தில் காற்று வருவதற்காக கதவு, ஜன்னலை திறந்து வைத்து துாங்குவதால், திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.

கோடை வெயில் தகிக்க துவங்கி உள்ளது. தற்போது இரவு நேரங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதால், புறநகர் பகுதிகளில், குறிப்பாக, கிராமங்களில் காற்று வருவதற்காக வீட்டுக் கதவை திறந்து வைத்து துாங்கும் வழக்கம் பலரிடம் உள்ளது.

ஒவ்வொரு கோடைகால சீசன் போதும், இரவு நேரத்தில் சுற்றிவரும் திருடர்கள், வீட்டின் முன் கேட்டை பூட்டிவிட்டு, முன் பக்க கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து துாங்கும் வீடுகளை கண்காணித்து, காம்பவுண்ட் சுவரை எட்டி குதித்து, வீட்டுக்குள் நுழைகின்றனர். வீட்டுக்குள் நீண்ட நேரம் பதுங்கி இருக்கும் திருடர்கள், பீரோவில் வைக்கப்பட்டுள்ள ரொக்கம் மற்றும் தங்க நகைகளை எளிதில் திருடி செல்கின்றனர்.

இதே போல மொட்டை மாடியில் பதுங்கும் திருடர்கள், இரவு நேரத்தில், மேல் தளத்தில் இருந்து வீட்டுக்குள் படிக்கட்டு வழியாக இறங்கி பொருட்களை திருடி செல்கின்றனர்

இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறுகையில், ”இரவு நேரங்களில் காம்பவுண்ட் கேட்டை மட்டும் மூடிவிட்டு, கதவை திறந்து வைத்து துாங்குவது அபாயகரமானது. இதனால் திருடர்கள் எளிதாக உள்ளே புகுந்து, தங்கள் கைவரிசையை காட்டும் வாய்ப்பு உள்ளது. எப்போதும் கதவை தாழிட்டு, உறங்கச் செல்ல வேண்டும்.

இரவு நேரத்தில் வீட்டின் முன் பக்கம், நல்ல வெளிச்சம் உள்ள பல்புகளை எரிய செய்ய வேண்டும். வெளியூர் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால், போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். விலை உயர்ந்த ஆபரணங்களை எப்போதும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைத்தல் வேண்டும். இதேபோல, குறைந்த அளவு ரொக்கத்தை மட்டுமே பீரோவில் வைத்தல் வேண்டும். வீடுகளில் ‘சிசிடிவி’ கேமரா பொருத்தினால் நல்லது.

இதே போல குடியிருப்பு பகுதிகளில், பொதுமக்கள் இணைந்து ‘சிசிடிவி’ கேமரா பொருத்துவதால், திருடர்கள் உள்ளே நுழைவதற்கு அஞ்சுவார்கள். மீறி திருட்டு நடந்தாலும், தொடர்புடைய நபர்களை எளிதில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். மலிவான பூட்டுகளைக் கொண்டு பூட்டக்கூடாது. தரமான பூட்டுகளால் பூட்ட வேண்டும். முன், பின் அறிமுகம் இல்லாத நபர்களை, வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது. ஏசி, பிரிஜ் உள்ளிட்டவை பழுது பார்க்க ஆண்கள் இருக்கும் போது மட்டுமே, பணியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிக்குள் சந்தேகத்துக்கிடமான நபர்கள் நடமாடுவதாக தெரிந்தால், உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்,” என்றனர்.