கார் ஷோரூமில் ரூ.43 லட்சம் மோசடி; 3 பேர் கைது- முன்னாள் ஊழியருக்கு வலைவீச்சு

0
67

காசோலையில் போலி கையெழுத்து போட்டு  கார் ஷோரூமில் ரூ.43 லட்சம் மோசடி; 3 பேர் கைது- முன்னாள் ஊழியருக்கு வலைவீச்சு

கோவையில் காசோலையில் போலி கையெழுத்து போட்டு கார் ஷோரூமில் ரூ.43 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கு வேலை செய்த முன்னாள் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.43 லட்சம் மோசடி

கோவை ராமநாதபுரத்தில் பிரசன்னா ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கார் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் சேலத்தை சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் (வயது 30) என்பவர் கணக்காளராக வேலை செய்து வந்தார். 1 மாதமே பணியாற்றிய அவர் திடீரென்று வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த கார் ஷோரூமின் மேலாளர் அங்குள்ள கணக்குகளை ஆய்வு செய்தார்.

அப்போது கடந்த வாரத்தில் அந்த கார் ஷோரூமின் வங்கி கணக்கில் இருந்து ரூ.43 லட்சம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு இருந்தது. உடனே இது குறித்து அந்த ஷோரூமில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியபோது, யாரும் மூர்த்தி என்பவரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பவில்லை என்று தெரிவித்தனர்.

போலீசில் புகார்

இதையடுத்து கார் ஷோரூம் நிர்வாகிகள் கோவை ராஜவீதியில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்தனர். அதில் கடந்த வாரத்தில் வங்கிக்கு வந்த நபர் ஒருவர் ரூ.43 லட்சத்துக்கான காசோலையை கொடுத்ததாகவும், அதை மற்றொரு வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்வதற்கான ஆர்.டி.ஜி.எஸ். விண்ணப்பத்தில் கையெழுத்துபோட்டு கொடுத்ததாகவும் கூறினார்கள்.

அப்போது வெங்கடசுப்பிரமணியன்தான் காசோலையை கொண்டு வந்து கொடுத்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

3 பேர் கைது

அத்துடன் குற்றவாளிகளை கண்டறிய மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் (தலைமையிடம்) சுகாசினி கண்காணிப்பில் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வெங்கடசுப்பிரமணியன் அந்த கார் ேஷாருமில் வேலை பார்த்த போது காசோலையை திருடி அதில் போலியாக கையெழுத்து போட்டு வங்கியில் பணத்தை எடுத்தது தெரியவந்தது. அதற்கு அவரின் நண்பர்களான விழுப்புரத்தை சேர்ந்த கார்த்திக், தினேஷ், சிவா ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார்த்தி உள்பட 3 பேரை கைது செய்துடன் அவர்களிடம் இருந்து ரூ.43 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான வெங்கடசுப்பிரமணியனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீசில் புகார் கொடுத்து ஓரிரு நாட்களில் 3 பேரை கைது செய்ததுடன், பணத்தை மீட்ட போலீசாரை கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.