கார் வெடித்து என்ஜினீயர் உடல் கருகி பலி

0
115

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்து, என்ஜினீயர் உடல் கருகி இறந்தார். அவர் மனித வெடிகுண்டாக வந்தவரா? என்பது குறித்து 6 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் நேற்று அதிகாலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கார் வெடித்து சிதறியது

கோவை கோட்டைமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் நேற்று அதிகாலை 4.10 மணிக்கு கார் ஒன்று வந்தது. கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்புறம் வந்தபோது வேகத்தடையில் ஏறி இறங்கிய கார், திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு பதறியடித்தபடி ஓடி வந்தனர். அப்போது கார் 2 துண்டாக உடைந்து கிடந்தது.

காரில் தீ மள, மளவென பற்றி எரிந்து கொண்டு இருந்தது. தீ ஜூவாலையின் தாக்கம் அதிகம் இருந்ததால், காருக்கு அருகில் யாரும் செல்ல முடியவில்லை.

மேலும் கோவிலின் முன்பகுதியில் இருந்த தகவல் பலகையும் தீயில் கருகி சேதம் அடைந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அதுகுறித்து தீயணைப்புபடை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கோவை தெற்கு பகுதி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உடல் கருகி பலி

அப்போது காருக்குள் 28 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இந்த பயங்கர சம்பவம் பற்றி அறிந்ததும் கோவை உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போலீசார் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு தடயவில் நிபுணர்கள் வந்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.

பலியான நபர் வந்த காரில், வீட்டு உபயோகத்துக்கு பயன்படும் 2 சமையல் கியாஸ் சிலிண்டர்களை எடுத்துச்சென்றுள்ளார். அதில் ஒரு சிலிண்டர் வெடித்து இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

வெடிபொருட்கள் சிதறி கிடந்தன

அதே நேரம் வெடித்து சிதறிய அந்த கார் டி.என். 01 எப்.8163 என்ற சென்னை பதிவு எண் கொண்டது. வெளிர் நீல நிறத்திலான அந்த கார் வெடித்து சிதறி கிடந்த பகுதியில் ஆங்காங்கே ஆணிகள், கோலிகுண்டுகள், இரும்பு குண்டுகள் (பால்ரஸ்) ஆகியவை சிதறிக்கிடந்தன. 2 சிலிண்டர்களும் கருகிய நிலையில் கைப்பற்றப்பட்டன.

எனவே இந்த சம்பவம் தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடந்த திட்டமிட்ட சதியா?. தற்கொலை படையாக செயல்பட்டாரா என்று பல்ேவறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கோவை கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. எனவே கார் வெடிப்பு சம்பவம் சதிச்செயலாக இருந்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் ஏராளமான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

கார் உரிமையாளர்களிடம் விசாரணை

உயிரிழந்தவர் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவர் இந்த காரை வைத்துள்ளார். பின்னர் அவர் வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். இவ்வாறு படிப்படியாக பலருக்கு கைமாறி, கடைசியாக கோவை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், போலீசார் அந்த கார்களை வைத்திருந்த உரிமையாளர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆய்வு

இந்தநிலையில் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் கோவை விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். சேகரிக்கப்பட்ட வெடிபொருள் தடயங்கள், இறந்த மர்ம நபர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு கருதி, தடுப்புகள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் உள்பட யாரும் வர தடைவிதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் கூறுகையில், தடய அறிவியல்துறையினர் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

போலீசார் குவிப்பு

இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர் கோவையில் உள்ள அனைத்து கோவில்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கோவையில் உள்ள 2 ஆயிரம் போலீசார் மட்டுமின்றி ஈரோடு உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கமாண்டோ படையினர், அதிவிரைவுப்படையினரும் வரவழைக்கப்பட்டு நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பதற்றம்

சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவையில் கடந்த மாதம் அந்த அமைப்பின் தலைவர்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அந்த அமைப்பின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து கோவையில் பாரதீய ஜனதா அலுவலகம், இந்து அமைப்பு நிர்வாகிகளின் கார்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் கோவையில் ஏற்கனவே பதற்றம் ஏற்பட்டது. அந்த பதற்றம் தணிந்து வந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முன்தினம், கோவில் முன்பு கார் வெடித்து மர்ம நபர் பலியான சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடையாளம் தெரிந்தது

போலீசாரின் தீவிர விசாரணையில் உடல் கருகி இறந்தவர் அடையாளம் தெரிந்தது. இறந்தவர் ஜமேஷா முபின் (வயது 28) என்ஜினீயர். உக்கடம் பகுதியை சேர்ந்தவர். அவரது தந்தை அப்துல் காதர். இவர் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் பழைய புத்தக கடை நடத்தி வந்தார். இவர் நாச வேலை செய்ய சதி திட்டத்துடன் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மனிதவெடிகுண்டு போல் செயல்பட்டு இந்த சதி செயலை அரங்கேற்ற வந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கார் வெடித்ததில் இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் உள்ள சிலரை மாநகர போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் இருந்து வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவையில் நடைபெற்ற இந்த கார் வெடிப்பு சம்பவம் கோவையில் பொதுமக்கள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.