கோவை; கார் வாங்குவதற்காக கொடுத்த முன்தொகையை பிடித்தம் செய்ததால், 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சின்சி என்பவர், நீலாம்பூரிலுள்ள குன்மோட்டார் கார் விற்பனை நிறுவனத்தில், பி.எம்.டபிள்யூ., கார் வாங்குவதற்காக, கடந்தாண்டில் 1.5 -லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து முன்பதிவு செய்தார். ஆனால், அவரால் கார் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அட்வான்ஸ் தொகையை திரும்ப கேட்டார். அந்நிறுவனம், ரத்து கட்டணமாக 50,000 ரூபாய் பிடித்தம் செய்தது.
இதனால் பாதிக்கப்பட்ட சின்சி இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘வாகன விற்பனை நிறுவனம், சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு 50,000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.