கார்த்திகை மாதம் துவங்கியதையொட்டி, கோவையில் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில், மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கோவை கவுண்டம்பாளையம் உடையார் வீதியில் மண்பாண்டம் தயாரிக்கும், தொழிலாளர்கள் அகல்விளக்குகள் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளி செந்தில்குமார் கூறியதாவது :
நாங்கள் பூர்வீகமாக மண்பாண்டம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். பானை, பொங்கல் பானை, அடுப்பு, பூந்தொட்டி, அகல்விளக்கு உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கிறோம். தற்போது கார்த்திகை தீபம் நெருங்கி வருவதால், அகல்விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். 1 லிட்டரில் இருந்து 5 லிட்டர் வரையிலான அகல்விளக்கு தயாரிக்கப்படுகிறது. அளவுக்குத் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்யப்படும். ஆண்டுதோறும், 15 லட்சம் அகல்விளக்குகள் வரை தயாரிக்கிறோம். இந்த ஆண்டு, கடந்த இரண்டு மாதமாக மழை பொழிவு ஏற்பட்டதால், அகல்விளக்கு உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால் அகல்விளக்குகளுக்கு, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுவரை, 10 லட்சம் விளக்குகள் வரை விற்பனையாகி உள்ளது. திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனை செய்து வருகிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
‘மண்ணுக்கு தட்டுப்பாடு’
”தற்போது மண்ணெடுப்பதில் சிக்கல் நிலவி வருவதால், தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மண்ணெடுப்பதற்கு அரசு தடையில்லா சூழலை, உருவாக்கும் பட்சத்தில் இந்தத் தொழில் தொடர்ந்து நடைபெறும். இல்லையென்றால் நலிவடைந்துவிடும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு, ரூ.5000 வழங்கப்படுகிறது. அதேபோல மண்பாண்டம் தயாரிக்கும் கருவிகள் வாங்க மானியம் வழங்க வேண்டும்,” என்றார் செந்தில்குமார்.