கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ஆட்டோக்கள் உடைப்பு

0
75

பொள்ளாச்சியில் பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகளின் கார்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அங்கிருந்த ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பரபரப்பான இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பொள்ளாச்சி குமரன் நகர் பழனியப்பா லே-அவுட்டில் வசிப்பவர் பொன்ராஜ். இவர் பா.ஜனதா அமைப்பு சாரா பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். இந்தநிலையில் நேற்று காலையில் அவர் எழுந்து பார்த்த போது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த அவரது கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்தது. மேலும் காரின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு இருந்தன.

அதே பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த பா.ஜனதா பிரமுகர் சிவக்குமாரின் கார் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு கிடந்தன. அந்த காரின் அருகில் பெட்ரோல் நிரப்பப்பட்டு வீசப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கிடந்தன.

ஆட்டோக்கள் உடைப்பு

மேலும் எம்.ஜி.எம். நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வெள்ளிங்கிரி என்பவரின் சரக்கு வாகனத்தின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கிடந்தது. குமரன் நகர் 2-வது லே-அவுட்டை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி சரவணக்குமார் என்பவரது 2 ஆட்டோக்களின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.

கோடாரி பறிமுதல்

இந்த சம்பவங்கள் பற்றிய தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் துணை சூப்பிரண்டுகள் தீபசுஜிதா (பொள்ளாச்சி), கீர்த்திவாசன் (வால்பாறை) ஆகியோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

பொன்ராஜ் என்பவரின் கார் கண்ணாடியில் ரத்தம் வடிந்து காணப்பட்டது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டும் கார் சேதமடையாததால், கோடரியாலும், கைகளாலும் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

மேலும் சம்பவ இடத்தில் கிடந்த கோடாரி, பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். நள்ளிரவில் மர்ம நபர்கள் காரின் மீது பெட்ரோல் குண்டை வீசி எரிக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால், தீப்பிடிக்காததால் ஆத்திரத்தில் கார் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

போலீஸ் குவிப்பு-பரபரப்பு

இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த பா.ஜனதாவினர் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.

பா.ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, கார்கள், ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பா.ஜனதா அலுவலகம், முக்கிய நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் குமரன் நகர், சூளேஸ்வரன்பட்டி, மரப்பேட்டை உள்பட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.