காரமடை,மார்ச்20: காரமடையை அடுத்துள்ள காளம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சீலியூர்,காளம்பாளையம்,மணல் புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் அவ்வப்போது வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வன விலங்குகள் சர்வசாதாரணமாக ஊருக்குள் உலா வர துவங்கியுள்ளன. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சீளியூர் பகுதியைச் சேர்ந்த திருமயம்(54) என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 4 யானைகள் கூட்டமாக வந்துள்ளன. அவை அங்கிருந்த சுமார் 50 க்கும் தென்னை மரங்களை வேரோடு முறித்து தின்றும்,மிதித்தும் சேதப்படுத்தி விட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பின. நேற்று காலை தோட்டத்திற்கு வந்த திருமயம் காட்டு யானைகளால் சேதம் செய்யப்பட்ட தென்னைகளை கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த வனத்துறையினரும்,சேத மதிப்பீடு குறித்து கணக்கீடு செய்து சென்றுள்ளனர்.