காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

0
53

காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா

கோவை மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ கோவில்களில் மிகவும் புகழ் பெற்றது காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவில். மாசிமக தேர் திருவிழா இந்தாண்டு கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் இரவு உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து கருடசோவையும் நடைபெற்றது. 4-ந் தேதி ஸ்ரீ பெட்டத்தம்மன் மலையில் இருந்து பெட்டத்தம்மன் அழைப்பு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு 8.30 மணிக்கு யானை வாகன உற்சவமும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி -பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் தேருக்குள் எழுந்தருளினார். தேரில் வீற்றிருந்த அரங்கநாத பெருமானை தரிசிக்க பக்தர் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

வடம் பிடிக்கும் நிகழ்ச்சி

மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் நிர்வாகம் சார்பாக ஊர்பிரமுகர்கள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து மாலை 4.45 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் கருணாநிதி, ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏ, காரமடை நகரமன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ், தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன்,

தி.மு.க மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மனோகரன், காரமடை பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் கே.ஆர்.கிருஷ்ணன், டி.டி.ஆறுமுகசாமி, மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜன், காரமடை நகரமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதை தொடர்ந்து தேர்நிலைத் திடலில் இருந்து புறப்பட்டது. தேரின் முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, கோவிந்தா என்று எழுப்பிய கோஷங்கள் விண்ணை அதிரவைத்தது. தேர் நான்கு ரத வீதிகளில் பத்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து நகர்ந்து வந்து இரவு தேர் நிலைத் திடலை அடைந்தது.

போக்குவரத்து மாற்றம்

மேலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாளை தேரில் விற்றிருந்து பவனி வருவதை காண பொதுமக்கள், பக்தர்கள் உயரமான இடங்களிள் முன்கூட்டியே இடம் பிடித்து நின்று தரிசித்தனர். காரமடை அரங்கநாத பெருமாள் தேரோட்டத்தை ஒட்டி அ.தி.மு.க நகர சார்பில் வைக்கப்பட்டநீர் மோர் பந்தலை கோவை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் திறந்து வைத்தார். இதில் நகர செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி, நகரமன்ற உறுப்பினர் வனிதா சஞ்சிவ்காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். காரமடை பகுதிகளில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சி சார்பாக பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை ெயாட்டி காரமடை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு தலைமையில், காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் இப்ராகிம், விஜயக்குமார், மற்றும் 300-க்கும் மேற்ப்பட்ட போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். காரமடை நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் தலைமையில் 100- க்கும் மேற்ப்பட்ட துப்புறவு பணியாளர்கள் தூய்மை படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். தேரோட்டத்தையொட்டி காரமடை சுற்றியுள்ள டாஸ்மார்க் கடைகள் நேற்று அடைக்கப்பட்டது.

சேஷ வாகன உற்சவம்

இதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்கிழமை) இரவு 10.30 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்ப திருவிழா சேஷ வாகன உற்சவம், 9-ந்தேதி மாலை 6.15 மணிக்கு சந்தான சேவையும், 10-ந் தேதி காலை 8.30 மணிக்கு வசந்த நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன், ஆய்வாளர் ஹேமலதா மற்றும் கோவில் அலுவலர்கள் மகேந்திரன், செல்வன் ஆகியோர் செய்து வருகின்றனர்.