காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலம்; கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

0
9

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் மாசிமக தேர்த்திருவிழா கடந்த 5ம் தேதி கிராம சாந்தி, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளிய அரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

தொடர்ந்து கடந்த 10ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பு நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணியளவில் திருக்கல்யாணம் உற்சவமும், அதனை தொடர்ந்து இரவு யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.

நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத, ஸ்ரீ அரங்கநாத பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார்.

விழாவின் முக்கிய திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்வு மாலை 4:15 மணியளவில் நடைபெற்றது. திருத்தேரினை சங்கு, சேகண்டி முழங்க, கோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது காத்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பின்னர், தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து, இரவில் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவஹர், குணசேகரன், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தாசர்கள், மிராசுதார்கள், ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்து அருள் ஆசி பெற்றனர்.

ரூரல் எஸ்.பி.,கார்த்திகேயன் தலைமையில் 5 டி.எஸ்.பி.,க்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சுமார் 450க்கும் மேற்பட்ட போலீசார், ஊர் காவல் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.