பொள்ளாச்சி நகரில் காந்தி சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில், சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
காந்தி சிலை
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சியில் கடந்த 1985-ம் ஆண்டு தமிழிசை சங்கம் மூலம் காந்தி சிலை நிறுவப்பட்டது. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் அவரது சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த நிலையில் சாலை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காந்தியின் சிலையை அகற்றி பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரு திண்ணையில் மூடி வைக்கப்பட்டு உள்ளது வருத்தமளிக்கிறது. எனவே அடுத்த மாதம்(ஆகஸ்டு) 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் மகாத்மா காந்தியின் சிலையை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தபால் சேவை
வக்கீல் அய்யப்பன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய துறைகளுக்கு அனுப்பும் தபால் சேவை மட்டும் நடக்கிறது. பொள்ளாச்சி நகராட்சி 34-வது வார்டில் உள்ள ஆர்.கே.நகர் நடுநிலைப்பள்ளியில 800 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வகுப்பறைகள் பற்றாக்குறை காரணமாக பகுதி நேர பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது. நகராட்சிக்கு பள்ளிக்கு சொந்தமான ஒரு ஏக்கருக்கும் மேற்பட்ட காலியிடம் அருகிலேயே உள்ளது. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை அரசு கைப்பற்றி புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று ஏற்கனவே இரு முறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் மனு மீது நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டமாகவும், கொடியுடன் வரும் புகார்களுக்கு மட்டுமே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் வந்து புகார் மனு அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தனி மாவட்டம்
பொள்ளாச்சி நகர பா.ஜனதா தலைவர் பரமகுரு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பல ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்த திருப்பூர் தனி மாவட்டமாக உள்ளது. மலைப்பகுதியான வால்பாறை அருகே உள்ள சோலையாறு பகுதிகளில் இருந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வர சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். இதனால் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கி அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.