கோவை: கோவை காந்திபுரம் சந்திப்பில், ‘யு டேர்ன்’ முறை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் சிக்னல் முறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது; போலீசார் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுகிறது.
கோவை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சிக்னல் பகுதியில் வாகனங்கள் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும் ‘யு டேர்ன்’ நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு, போக்குவரத்து போலீஸ் இணைந்து சம்பந்தப்பட்ட இடங்களில் கள ஆய்வு செய்து, சோதனை முறையில் இயக்கிப் பார்த்து, தீர்வு ஏற்படும் பட்சத்தில் அமல்படுத்துகிறது.
முதன்முதலாக, லாலி ரோடு சந்திப்பில் ‘யு டேர்ன்’ வசதி செய்தபோது, வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இன்று வரை அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியின்றி, வாகனங்களில் பயணிக்கின்றனர்.
அதேபோல், வடகோவை சிந்தாமணி பகுதியில், வரிசையில் வாகனங்கள் நிற்காமல், ‘ரவுண்டானா’வை கடந்து செல்கின்றன. மாநகராட்சி சார்பில் நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அவிநாசி ரோட்டில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில், சிரமம் ஏற்படுவதாக கருதப்பட்டதால், ‘யு டேர்ன்’ வசதி செய்யப்பட்டது; சின்னியம்பாளையம் வரை காத்திருக்காமல் வாகனங்கள் செல்கின்றன.
இதேபோல், காந்திபுரம் சந்திப்பு பகுதியில், ‘யு டேர்ன்’ வசதி செய்யப்பட்டது. இது, வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்காமல் சிரமத்தையே உருவாக்கியது.
காந்திபுரம் சந்திப்பை கடந்ததும், ‘யு டேர்ன்’ பகுதியில் பஸ்கள் மற்றும் கன ரக வாகனங்கள் திரும்ப முடியாமல் திணறின. அவை திரும்பும் வரை, மற்ற வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
பாரதியார் ரோட்டில் வருபவர்கள், கிராஸ்கட் ரோட்டுக்குச் செல்ல வேண்டுமெனில், இடதுபுறம் திரும்பி காந்திபுரம் வரை சென்று, ‘யு டேர்ன்’ அடித்து, வர வேண்டியிருந்தது.
இதேபோல், கணபதி, சித்தாபுதுார், நுாறடி ரோட்டில் இருந்து வருவோரும் இடது புறம் திரும்பி, ‘யு டேர்ன்’ அடித்து, நஞ்சப்பா ரோட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்நடைமுறை வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருந்தது; ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசார் அவதிப்பட்டனர்.
அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்டு, ‘யு டேர்ன்’ நடைமுறையை ரத்து செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரைத்தனர்.
அதை ஆய்வு செய்த கமிஷனர், மீண்டும் சிக்னல் முறையை அமல்படுத்த அறிவுறுத்தினார்.
அதன்படி, காந்திபுரம் சந்திப்பு பகுதியில், மீண்டும் சிக்னல் முறை அமலுக்கு வந்திருக்கிறது; பழையபடி போலீசாரே, வாகனங்களை ஒழுங்குபடுத்துகின்றனர்.