காதலித்த பெண்ணுக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

0
4

கோவை; கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், 22 வயது இளம்பெண். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரும், நாகர்கோவிலை சேர்ந்த சுஜித், 24 என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த நான்கு நாட்களாக சுஜித் மொபைல்போன் வாயிலாக பெண்ணை தொடர்பு கொண்டார். ஆனால், இளம்பெண் அவரது அழைப்பை ஏற்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த சுஜித், கத்தியுடன் கோவை வந்தார். நேற்று முன்தினம் இளம்பெண் தங்கியுள்ள விடுதிக்கு சென்ற சுஜித், பெண்ணை சந்தித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, இளம்பெண்ணை சுஜித் குத்த முயன்றார். தடுக்க முயன்ற பெண்ணுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர். தப்ப முயன்ற சுஜித்தை பிடித்து, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதித்த போலீசார் அவரை கைது செய்தனர்.