காதலித்து திருமணத்துக்கு மறுத்த வாலிபர் கைது

0
74

கோவையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில்,காதலித்து திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தற்கொலை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்தவர் மேகலா பிரியா (வயது 24). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்தார். இவர் ரத்தினபுரி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அவர் பணிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண்ணுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் மேகலாபிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கு அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. நீண்ட நேரம் அவர்கள் கதவை தட்டியும் திறக்கப்படாததால் அவர்கள் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து இளம் பெண் தங்கியிருந்த அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மேகலா பிரியா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காதலன் கைது

இந்த நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த பெண்ணின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் அந்த இளம்பெண்ணிற்கு தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (25) என்பவருடன் காதல் ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் பிரசாந்த் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்தார். இவர்கள் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். மேலும் பிரசாந்த் கோவை வந்து மேகலா பிரியாவை நேரில் சந்தித்து பேசி உள்ளார். இந்த நிலையில் மேகலா பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரசாந்தை வலியுறுத்தினார். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது மீண்டும் மேகலா பிரியா திருமணத்திற்கு வலியுறுத்தி உள்ளார். ஆனால் பிரசாந்த் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்பின்னர் பிரசாந்த் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதால் இனி வாழக்கூடாது என்று முடிவெடுத்த மேகலாபிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் காதலன் பிரசாந்த்தை இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.