காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி படுகாயம்

0
88

காட்டு யானைகள்

வால்பாறை வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர்தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இதுதவிர காலநிலை மாற்றம் காரணமாக கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறைக்கு இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் அவ்வப்போது முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகளும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வசித்து வரும் நிலை உள்ளது.

முகாம்

இந்த நிலையில் தாய்முடி எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த யானைகள் நேற்று முன்தினம் தாய்முடி எஸ்டேட் குடியிருப்புக்குள் புகுந்தன. இந்த யானைகள் அங்கிருந்த ரேஷன் கடையை உடைத்து, அங்கிருந்த அரிசியை தின்றும், பொருட்களை வெளியே வீசியும் அட்டகாசம் செய்தன.

சத்தம் கேட்டு வந்த எஸ்டேட் தொழிலாளர்கள் காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் தொழிலாளர்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று முகாமிட்டப்படி நின்றதாக தெரிகிறது.

யானை தாக்கி படுகாயம்

இதற்கிடையில் சோலையாறு எஸ்டேட் 2-வது பிரிவை சேர்ந்த எஸ்டேட் தொழிலாளி துரைராஜ் (வயது 51) நேற்று காலை 6 மணியளவில் நடைபயிற்சியாக சோலையாறு எஸ்டேட்டில் இருந்து நல்லகாத்து எஸ்டேட் வரை சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்து பிரிந்த 6 காட்டு யானைகள் நல்லகாத்து எஸ்டேட் சுங்கம் சாலையை கடந்து மீண்டும் சோலையாறு எஸ்டேட்டின் மற்றொரு பகுதிக்கு சென்று கொண்டிருந்தன. காட்டு யானைகளை பார்த்த துரைராஜ், பயத்தில் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் காட்டு யானை ஒன்று அவரை துரத்தி சென்று, தாக்கி துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் துரைராூக்கு கால், இடுப்பு, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை

அப்போது அந்த வழியாக வந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் துரைராஜை மீட்டு, ஆம்புலன்சில் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், துரைராஜை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரத்தை வழங்கினார்.

பொதுமக்கள் பீதி

காட்டு யானை தாக்கி தொழிலாளி காயமடைந்தது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கேரள வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகள் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகள் குடியிருப்பு புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் தனியாக வெளியே செல்ல அச்சமாக உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியின் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

வனத்துறையினர் எச்சரிக்கை

இதையடுத்து மானாம்பள்ளி வனத்துறையினர் சோலையாறு எஸ்டேட் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

தொழிலாளியை தாக்கிய யானைகள் சோலையாறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு நின்று வருகின்றன. அந்த யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். இரவு, அதிகாலை நேரங்களில் தனியாக செல்லக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.