காட்டு ப்பன்றிகளை கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி; ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

0
71

பெ.நா.பாளையம்; பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளை விவசாயிகளே கொல்லும் அதிகாரத்தை, தமிழக அரசு வழங்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், நாராயணசாமி நாயுடு பிறந்தநாளில், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, போராட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். கூட்டத்தில், காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்வதில் மூன்று கி.மீ., நிபந்தனை ஏற்புடையது அல்ல. வன எல்லையில் இருந்து வெளியே வரும் அனைத்து காட்டு பன்றிகளையும் கொல்ல வேண்டும். விவசாயிகளே, காட்டுப் பன்றிகளை கொல்வதற்கு அனுமதிக்க வேண்டும். அபரிமிதமாக பெருகிவிட்ட காட்டு பன்றிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வரை, வனத்துக்கு வெளியே வேட்டையாடுபவர்களை தடுக்கக்கூடாது. அப்போதுதான் இப்பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு ஏற்படும். வனத்துக்கு வெளியே விவசாயிகள், பொதுமக்கள் காட்டு பன்றிகளை கொன்றாலோ, வேட்டையாடினாலோ தடுத்தால் கிராமமே திரண்டு முறியடிப்பது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

காட்டு பன்றிகள் மட்டுமல்லாமல், யானை, சிறுத்தை, மயில், மான், குரங்கு, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும். இதற்காக கிராமங்கள் தோறும் விவசாயிகள், பொதுமக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மத்தம்பாளையத்தில் விவசாயிகள் பங்களிப்போடு, டாக்டர் சிவசாமி நினைவாலயம் விரைவில் அமைக்கப்படும் எனவும், விவசாய விளைப் பொருள்களுக்கு ஆதார விலை கோரி பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.