பெ.நா.பாளையம்: வன எல்லையில் இருந்து, 3 கி.மீ.,க்கு அப்பால் வரும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்லும் தமிழக அரசின் திட்டம் பலன் தராது என, விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
கோவை வடக்கு பகுதி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூட்டம், கூட்டமாக வந்து அழிக்கும் காட்டுப்பன்றி பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, வன எல்லை பகுதியில் இருந்து, 3 கி.மீ., வரை தென்படும் காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடித்து, மீண்டும் வன எல்லைக்குள் கொண்டு செல்வது, 3 கி.மீ., அப்பால் வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்வது என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
தீர்வு ஏற்படாது
இத்திட்டத்தின்படி காட்டுப்பன்றி பிரச்னைகள் அதிகம் உள்ள பகுதியில் வனவர், வருவாய் துறையினர், முக்கிய ஊர் பிரமுகர்கள் அடங்கிய குழு மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும். இக்குழு காட்டு பன்றிகளை சுடுவது தொடர்பாக முடிவு செய்யும். இதற்காக தமிழக அரசின் வனத்துறை, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய ரைபிள் துப்பாக்கிகளை மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வாங்கி உள்ளது. தற்போது, கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, 91 வன பணியாளர்களுக்கு காட்டு பன்றிகளை
எவ்வாறு சுடுவது என, பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தால், காட்டுப்பன்றிகள் வேளாண் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழிக்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படாது என்ற நம்பிக்கையின்மையை விவசாயிகள் வெளிப்படுத்தி உள்ளனர்.
சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் விவசாயி பிரபு கூறுகையில்,தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், பன்னிமடை, மடத்தூர், பாப்பநாயக்கன்பாளையம், காளையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப் பகுதியை ஒட்டிய இடத்தில் மானாவாரி பயிர் வளர்ப்பில் ஏழை விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வரை காட்டுப்பன்றி நடமாட்டத்தை கட்டுப்படுத்த, எவ்வித தடுப்பு நடவடிக்கையையும் அரசு அறிவிக்கவில்லை. இதனால் மானாவாரி விவசாயிகள் மிகுந்த பாதிப்பு அடைவர்.
கடினமான செயல்
அதிலிருந்து, 3 கி.மீ., வரை நடமாடும் காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடித்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தடாகம்
வட்டாரத்தில் மட்டுமே ஆயிரக்கணக்கான காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் உள்ளது. கூட்டம், கூட்டமாக வரும் காட்டு பன்றிகளை கூண்டு வைத்து பிடித்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயம்.
வனப்பகுதியில் இருந்து, 3 கி.மீ., தூரத்துக்கு அப்பால் என்றால் கணுவாய் அல்லது பன்னிமடை பகுதியில் மட்டுமே காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல முடியும். இரவு நேரத்தில் மட்டுமே உணவு தேட வெளியே வரும் காட்டுப்பன்றிகளை, நெருக்கமான மக்கள் குடியிருப்பு மிகுந்துள்ள பகுதியில் சுட்டுக் கொல்வது கடினமான செயல். தற்போது, தடாகம் வட்டாரத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் அமிலத்தை பிரதான உரமாக பயன்படுத்துகின்றனர். இதை நுகர்ந்து வேளாண் நிலங்களுக்குள் புகும் காட்டுப் பன்றிகள், பயிர்களை வேகமாக அழித்து வருகின்றன.
வாழை மரத்தின் கிழங்கு பகுதியை முழுவதுமாக தோண்டி காட்டு பன்றிகள் தின்று விடுகின்றன. நன்கு வளர்ந்த காட்டுப்பன்றி, வாழை மரத்தின் மேல் குருத்துகளை ஆடு, மாடு மரத்தின் மீது முன்னங்கால்களை வைத்து நிற்பது போல நின்று, தின்று விடுகின்றன.
தோப்புக்குள் விழும் தேங்காய்களை உருட்டி சென்று, அதை உரித்து தேங்காயை உடைத்து தின்று விடுகின்றன. இதுபோல பல்வேறு தொடர் தொல்லைகளை அளித்து வரும் காட்டுப் பன்றிகளை வனப்பகுதிக்குள்ளேயே இருக்குமாறு கட்டுப்படுத்த வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இருவருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
காரமடை வனச்சரகத்தில் காட்டுப்பன்றிகளை சுடும் பயிற்சி இருவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், காரமடை வனச்சரத்தில் இருந்து பாரஸ்டர் ஒருவர் மற்றும் கார்டு ஒருவர் என இரண்டு பேர், கோவையில் நடைபெற்ற காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுடும் பயிற்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்குகாட்டுப்பன்றிகளை சுடுவது தொடர்பான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.