கோவை; பிளஸ்2 பொதுத் தேர்வு நேற்று நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் ஒருவருக்கொருவர் சட்டை மீது ‘இங்க்’ தெளித்தும், காகிதங்களை கிழித்து எறிந்தும், பள்ளி வாழ்க்கைக்கு உற்சாகமாக விடை கொடுத்தனர்.
2024 – 25ம் கல்வியாண்டுக்கான பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த, 3 முதல் நேற்று வரை நடந்தது. கோவை மாவட்டத்தில், 128 மையங்களில், 363 பள்ளிகளை சேர்ந்த, 34 ஆயிரத்து, 958 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
தவிர, தனித்தேர்வர்கள், 581 பேர் எழுதினர். தேர்வுப் பணியில் வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என, 2,619 பேர் ஈடுபட்டனர்
தேர்வின் கடைசி நாளான நேற்று இயற்பியல், பொருளாதாரம் பாடங்களை மாணவர்கள் எழுதினர்.
இரு பாடங்களிலும், 3, 5 மதிப்பெண் வினாக்கள், சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ மாணவியர், சக மாணவர்களின் சட்டை மீது, ‘வாழ்த்துக்கள்’, ‘மீண்டும் சந்திப்போம்’ போன்ற வாசகங்களை, பேனாவில் எழுதி விடை பெற்றனர்.
சிலர் சட்டை மீது ‘இங்க்’ தெளித்தும், காகிதங்களை கிழித்து எறிந்தும், தேர்வு முடிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.