கவனம் ஈர்க்கும் அறிவிப்பு பலகை

0
31

பொள்ளாச்சி; வால்பாறையில், நீர்தேக்கங்கள், அணைகள், கோவில்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் வனவிலங்குகளைக் காண அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர்.இதன் காரணமாக, வனம் ஒட்டிய சாலையில், வனத்துறை வாயிலாக ஆங்காங்கே, விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதில், குரங்குகளுக்கு உணவளிக்காதீர், யானை கடக்கும் பகுதி, வாகனங்களை நிறுத்தக் கூடாது, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது, எனபன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், சிலர், மலைப்பாதையில், வாகனங்களை நிறுத்தி போட்டோ மற்றும் வீடியோ எடுக்கின்றனர். இதனை தடுக்க, நெடுஞ்சாலைத் துறை வாயிலாகவும், வனவிலங்குகளின் போட்டோவை உள்ளடக்கிய விழிப்புணர்வு பலகைகள், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

அதில், விபத்து அபாய பகுதிக்கு செல்ல வேண்டாம்; பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக, அருகில் உள்ள மருத்துவமனையைக் கண்டறிவதற்கான ‘கியூஆர் கோடு’ பதிவிடப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வனவிலங்கு போட்டோவுடன் கூடிய அறிவிப்பு பலகை, சுற்றுலா பயணியரின் கவனத்தை ஈர்க்கிறது. அதேநேரம், அதில் உள்ள வாசகங்களை படிக்கவும் துாண்டுகிறது. இதன் வாயிலாக, வனவிலங்குகள் மற்றும் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

இவ்வாறு, கூறினர்.