களைகட்டியது மாசாணியம்மன் கோவில் திருவிழா; ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்

0
20

ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை காண, அதிகளவு பக்தர்கள் திரண்டனர். அம்மனை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழா என்றால், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மக்களும் வந்து கொண்டாடி மகிழ்வது வழக்கம்.நடப்பாண்டு திருவிழா துவங்கியது முதல் விழாவை மிக விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

நேற்றுமுன்தினம், குண்டம் திருவிழாவையொட்டி பல கிராம மக்கள், பால் குடம் எடுத்தும், வேல் குத்தியும் ஊர்வலமாக வந்து அம்மனை தரிசித்தனர்.

மேலும், இரவு குண்டம் பூ வளர்க்கும் நிகழ்வில், மக்கள் விறகுகளை அதிகளவு கொண்டு வந்து கொடுத்து வழிபாடு செய்தனர். இரவு அம்மன் திருவீதி உலா, குண்டம் பூ வளர்த்தலைக்காண பக்தர்கள் கூட்டமாக திரண்டனர்.

குண்டம் திருவிழா நடைபெறும் இடத்திலேயே, இரவு தங்கி காலையில் குண்டம் இறங்குவதை கண்டுகளித்தனர். எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.குண்டம் திருவிழாவையொட்டி திருவாபரண பெட்டி மற்றும் சூலாயுதத்துக்கு பூஜை நடத்தப்பட்டு குண்டம் திருவிழா நடந்தது.

பாதுகாப்பு வசதிகள்

தீயணைப்புத்துறை மற்றும் ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. குண்டம் இறங்கும் இடத்தில் தீயணைப்புத்துறையினர் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் வசதிக்காக, போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் இயக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகளும், மின்சார பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனைமலை பேரூராட்சி சார்பில், துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம் வழங்கினர். குண்டம் திருவிழா நடைபெறுவதால், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மாற்று வழித்தடத்துக்கு மாற்றி விடப்பட்டன.

திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திரண்டதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

தொடர்ந்து, விழாவையொட்டி இன்று காலை 7:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள் கொடி இறக்குதல், காலை, 10:30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு, 8:00 மணிக்கு மகா முனி பூஜை நடக்கிறது.

நாளை (16ம் தேதி) காலை, 11:30 மணிக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜையும் நடக்கிறது.