தொண்டாமுத்தூர்; நரசீபுரத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்காக, பல்வேறு உதவிகளை செய்தவர்களின் வீடு தேடி சென்று, கிராம மக்கள் பாராட்டி கவுரவித்துள்ளனர்.
நரசீபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு, பல தரப்பினரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளிக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருபவர்களை, அவர்களின் வீடு தேடிச்சென்று கவுரவிக்க, கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவி செய்து வரும் ஜெகதீஷ் குமார் என்பவருக்கு, ‘மனிதநேய செம்மல் ‘ என்ற விருதும், நரசீபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, ஐந்து ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய, செந்தில்குமார் என்பவருக்கு, ‘வள்ளல் பெருந்தகை’ என்ற விருதும் வழங்கி கவுரவித்தனர்.
அதேபோல, கோவை டெக் சிட்டி ரோட்டரி சங்கத்தின் மூலம் நான்கு புதிய வகுப்பறைகள் கட்டி தந்த கமல் குமார் என்பவருக்கு, ‘கல்வி பணி செம்மல்’ என்ற விருதும், தற்காலிக ஆசிரியர்களுக்கு, மூன்று ஆண்டுகளாக ஊதியம் வழங்கி வரும் விஸ்வநாதன் என்பவருக்கு, ‘அருட்பணி செம்மல்’ என்ற விருதும், பார்வை திறன் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வு உதவி செய்த பொன் மீனாட்சி என்பவருக்கு,
‘வனவர் கோன் பாவை’ என்ற விருதும் வழங்கி, கிராம மக்கள் பாராட்டினர். கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.