கோவை: கோவை விழாவின், 17வது பதிப்பை முன்னிட்டு ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் ‘லைகா கோவை கிங்ஸ்’ சார்பில் ‘தினமலர் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. இதில், 32 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், நான்கு கல்லுாரி மைதானங்களில் அணிகள் களம் இறங்கின.
நாக் அவுட்’ முறையிலான, 20 ஓவர் போட்டி நடந்தது. சி.ஐ.டி., கல்லுாரியில் நேற்று நடந்த போட்டிகளை ‘கோவை விழா’ இணை தலைவர் சரிதா ‘டாஸ் வின்’ செய்து துவக்கி வைத்தார். தலைவர் அருண் செந்தில்நாதன், ‘யங் இந்தியன்ஸ்’ சேர்மன் விஷ்ணு பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
நீயா.. நானா.. போட்டி!
முதல் போட்டியில், ஜே.சி.டி., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியும், இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரியும் மோதின. ஜே.சி.டி., அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 147 ரன்கள் எடுத்தது.
இந்துஸ்தான் அணி, 12.2 ஓவர்களில், 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. 2.2 ஓவர்களில், 3 விக்கெட்கள் வீழ்த்திய ஜே.சி.டி., அணி வீரர் கிஷோருக்கு, எஸ்.எஸ்.வி.எம்., நிறுவனங்களின் அறங்காவலர் மோகன்தாஸ் ஆட்டநாயகன் விருது வழங்கினார்.
வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லுாரியும், கற்பகம் பல்கலை அணியும் மோதிய போட் டியில் வி.எல்.பி., அணி 20 ஓவர்களில், 7 விக்கெட் இழந்து, 175 ரன்கள் எடுத்தது.
கற்பகம் அணி, 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை சந்தித்தது. 53 ரன்கள் குவித்ததுடன், 4 ஓவரில், 13 ரன்கள் வழங்கி, 1 விக்கெட் எடுத்த வி.எல்.பி., அணி வீரர் பாலதரணுக்கு, பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.எஸ்.என்.எம்.வி., கல்லுாரி மைதானத்தில், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும், அக்ஷயா இன்ஜி., கல்லுாரியும் மோதின. அக்ஷயா அணியினர், 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 101 ரன்கள் எடுத்தது.
கிருஷ்ணா கல்லுாரி அணி வீரர்கள், 11.2 ஓவர்களில், 1 விக்கெட் இழப்புக்கு, 102 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். 3.2 ஓவரில், 16 ரன்கள் வழங்கி, 5 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் சூரியனிற்கு, எஸ்.என்.எம்.வி., கல்லுாரி முதல்வர் சுப்ரமணி ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லுாரியும், ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி அணிகளும் மோதின. எஸ்.என்.எம்.வி., அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 114 ரன்கள் எடுத்தது.
ரத்தினம் கல்லுாரி அணி, 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு, 87 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தனர். எஸ்.என்.எம்.வி., அணி வீரர் கவுதம், 4 ஓவர்களில், 18 ரன்கள் வழங்கி, 4 விக்கெட்களை வீழ்த்தி சிறந்த ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
சங்கரா கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், நாராயணகுரு கல்லுாரியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும் மோதின. நாரயாணகுரு அணி, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 71 ரன்கள் எடுத்தது.
ராமகிருஷ்ணா அணியினர், 5.4 ஓவர்களில் இரு விக்கெட் இழப்புக்கு, 74 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். 20 பந்துகளில், 55 ரன்கள் விளாசிய அணி வீரர் கிஷோருக்கு, சங்கரா கல்லுாரி முதல்வர் ராதிகா ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியும், ஸ்ரீ சாய் ரங்கநாதன் இன்ஜி., கல்லுாரி அணியும் மோதிய போட்டியில் ரங்கநாதன் அணியினர் 20 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு, 123 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய பி.பி.ஜி., அணியினர், 14.5 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு, 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். 4 ஓவர்களில், 15 ரன்கள் வழங்கி, 3 விக்கெட் வீழ்த்திய பி.பி.ஜி., அணி வீரர் ராகுலுக்கு, சுப்ரீம் மொபைல்ஸ் ஏரியா மேலாளர் சுரேஷ் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் நடந்த முதல் போட்டியில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மாருதி உடற்கல்வி கல்லுாரியும், யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரியும் மோதின.
டாஸ்’ வென்ற யுனைடெட் கல்லுாரி அணியினர் பவுலிங் தேர்வு செய்தனர். ராமகிருஷ்ணா வித்யாலயா அணியினர், 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு, 196 ரன்கள் எடுத்தனர். அணி வீரர் கோகுல், 51 பந்துகளில், 95 ரன்கள் விளாசினார்.
யுனைடெட் அணியினர், 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 34 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றனர். 4 ஓவரில், 5 ரன்கள் வழங்கி, 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்த அணி வீரர் நந்தனிற்கு, ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
கரம் கோர்த்த நிறுவனங்கள்
‘தினமலர்’ நாளிதழுடன் எஸ்.எஸ்.வி.எம்., நிறுவனங்கள், இந்துஸ்தான் நிறுவனங்கள், ‘வால்ரஸ்’ நிறுவனம், சுப்ரீம் மொபைல்ஸ் ஆகியன இணைந்து வழங்குகின்றன. நேற்றைய போட்டிகளை தொடர்ந்து, வரும், 25 முதல், 29ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.
ரொக்கமும்; ‘டிராபி’யும்!
போட்டியில் முதல் பரிசை வெல்லும் அணிக்கு, ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் , நான்காம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் டிராபிகள் வழங்கப்படவுள்ளது. மேலும், போட்டியின் முடிவில் மூன்று சிறந்த பவுலர்கள் ‘லைகா கோவை கிங்ஸ்’ அணி மூலம் ‘நெட் பவுலர்’கள் ஆக தேர்வு செய்யப்பட உள்ளனர்.