கல்லாறு – பர்லியார் மலையேற்றம் தற்காலிக நிறுத்தம்; காட்டுத்தீ அபாயத்தால் வனத்துறை முன்னெச்சரிக்கை

0
4

மேட்டுப்பாளையம் : சுட்டெரிக்கும் வெயிலால், காட்டுத்தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், கல்லாறு – – பர்லியார் இடையே மலையேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு — பர்லியார் இடையே 3.5 கி.மீ., அடர் வனப்பகுதியில், சுற்றுலா பயணிகள் மலையேற்றம் மேற்கொள்ளும் வகையில், புதிதாக கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்த மலையேற்றம் திட்டம் துவங்கியது.

இத்திட்டத்தின் வாயிலாக, கல்லாறு பகுதியை சேர்ந்த 4 ஆண்கள், 4 பெண்கள் என 8 பழங்குடியினர் வேலைவாய்ப்பு பெற்றனர். இதுவரை 450க்கும் மேற்பட்டோர் மலையேற்றம் ஏறி உள்ளனர். தற்போது கடும் வெயில் நிலவி வருவதால், காட்டுத்தீ விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் மலையேற்ற சுற்றுலா திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:

கல்லார் — பர்லியார் இடையே சுற்றுலா பயணியர் மலையேற்றம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இணையத்தில் பதிவு செய்து தான் வரவேண்டும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மலையேற்றம் அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. காட்டுத்தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வனவிலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக இடப்பெயர்ச்சியும் நடைபெறுவதால், மலையேற்ற சுற்றுலா, பிப்ரவரி 2வது வாரம் முதலே தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. வரும் ஏப்ரல் 2வது வாரம் வரை இந்த தடை இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

சூழல் சுற்றுலா முடங்கும்?

சமீபத்தில் பில்லூர் அணையின் நீர்மட்டம், வெயிலால் 75 அடிக்கும் கீழ் சென்றது. தற்போது கோடை மழை காரணமாக மீண்டும், 85 அடி வந்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்டது பில்லூர் அணை. மழை பெய்யாமல் இருந்தால் அணையின் நீர்மட்டம் மீண்டும் கிடுகிடுவென குறையும் வாய்ப்புள்ளது.இதனால் பில்லூர் அணை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரளிக்காடு சூழல் சுற்றுலா முடங்கும் அபாயம் உள்ளது. சூழல் சுற்றுலாவை நம்பி பரளிக்காடு, பூச்சமரத்துார், பில்லுார், நீராடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, 20க்கும் மேற்பட்ட பரிசல் ஒட்டுநர்கள், 12க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.-