கல்குவாரியால் பயிர் சாகுபடி பாதிப்பு: விவசாயி கண்ணீர்

0
7

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, நெ.10 முத்தூர் பகுதியில் செயல்படும் கல்குவாரியால், விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதியில், ஏராளமான குவாரிகள் செயல்படுகின்றன. இதில், பல கல்குவாரிகள் விதிமுறையை மீறி செயல்படுகின்றன. நெ.10 முத்தூர் பகுதியில் உள்ள கல்குவாரிகள் அருகே, அதிக அளவு விவசாய நிலம் இருப்பதால் அவ்வப்போது பாதிப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக, விளைச்சல் நிலம் அருகே உள்ள கல்குவாரியில் அதிக வெடி வைத்து கற்கள் எடுக்கும் போது கிளம்பும் புகை, விளை நிலத்தில் உள்ள பயிர்கள் மீது படிவதால், பயிர்கள் பாதிக்கிறது. இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் விளை நிலத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது.

விவசாயிகள் கூறியதாவது:

விளை நிலத்தில், ஒரு ஏக்கர் பரப்பில் சுரைக்காய், அரை ஏக்கரில் தக்காளி மற்றும் ஒரு ஏக்கரில் புடலை சாகுபடி செய்துள்ளோம். தற்போது, விளை நிலம் அருகே உள்ள குவாரியில், வெடி வைப்பதால் ஏற்படும் புழுதி, விளை நில பயிர் மீது படிகிறது. இதனால், பயிர் வளர்ச்சி, மகசூல் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு போக சாகுபடிக்கு, புடலையில் மட்டும், 25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுவதுடன், பறிப்பு காலம் வரை பயிர்களை வளர்த்து அதற்கு செலவு செய்ததும் வீணாகிறது. இதே போன்று தக்காளி செடிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளது. இது பற்றி அரசு அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் அளித்தும், இதுவரை குவாரி உரிமையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால், குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு, கூறினர்.