கோவை; தற்காலிக தொழிலாளர்களுக்கு, கலெக்டர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய உயர்வை வழங்க, பாரதியார் பல்கலை பணியாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:
பாரதியார் பல்கலையில், 600க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில், தற்காலிக தொழிலாளர்களான எங்களுக்கு, கலெக்டர் செயல்முறை ஆணைகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்துக்கு, 30 நாட்கள் வீதம் உயர்த்தி வழங்கிட வேண்டும். இதுகுறித்து பல்கலைக்கு உத்தரவிட வேண்டும்.
தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கருதி, இதை வழங்கிட வேண்டும். கடைசியாக, 2022ம் ஆண்டில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அரசாணையின்படி, 30 நாட்கள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், இங்கு 28 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கு, கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.